இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்து உள்ளது. இதன் பின்பு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை வென்று வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்திய அணி தொடரை இழந்துள்ளது. இத்தனைக்கும் முதல் டெஸ்ட் போட்டியை வென்ற பின்பு அடுத்த 2 போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்று உள்ளது. தோல்விக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே இருவரும் சிறப்பாக விளையாடாதது தான் என்று பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தென் ஆபிரிக்க அணி சார்பில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தியதில் அந்த அணியின் இளம் வீரர் கீகன் பீட்டர்சனுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான். மூன்று அரை சதங்களுடன் 276 ரன்கள் எடுத்துள்ளார் இவர். மேலும் இந்திய அணி தோல்வியுற்ற இரண்டு போட்டிகளிலுமே அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்த பின்பு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவரை அதிகமாக புகழ்ந்துள்ளார்.
Keegan Peterson (KP). Excellent initials (@KP24). A great world player in the making. My childhood hero Gundappa Vishwanath comes to mind #SAvIND pic.twitter.com/6T9SuzN6St
— Ravi Shastri (@RaviShastriOfc) January 14, 2022
ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ள ட்வீட்டில், சீகன் பீட்டர்சன் என்னும் பெயர் கெ மற்றும் பி என்ற இரண்டு எழுத்துக்களில் தொடங்குவதால் அணி இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார். மேலும் உலகத்தரம் வாய்ந்த வீரர் ஒருவர் உருவாகி வருவதாகவும் கூறி பீட்டர்சனை புகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்லாது இவரின் ஆட்டத்தை பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய இளம் வயது ஹீரோ குண்டப்பா விஸ்வநாத் நினைவுக்கு வருவதாகவும் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் இவரை ஒருநாள் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணி எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. வரும் புதன்கிழமை தொடங்க உள்ள ஒரு நாள் தொடரிலாவது இந்திய அணி சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெறுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.