“வேகமா விளையாடுறது பெருமையா?.. இங்கிலாந்து பாஸ்பால் பாச்சா பலிக்காது” – புஜாரா பேச்சு

0
485
Pujara

பொதுவாக நீண்ட வடிவ கிரிக்கெட்டில் மூன்றாமிடத்தில் வரக்கூடிய பேட்ஸ்மேன் என்பவர், டாப் ஆர்டரும் கிடையாது மிடில் ஆர்டரும் கிடையாது. அவர் இந்த இரண்டு ஆர்டர்களையும் இணைக்கும் ஒரு சங்கிலியாக இருக்கக்கூடியவர்.

எனவே இந்த இடத்தில் பேட்டிங் செய்ய வரக்கூடியவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆட்டத்தை நகர்த்திச் செல்ல வசதியாக இருக்கும்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் சில காலங்களுக்கு முன்பாக இந்த வேலையை மிக அருமையாக செய்தவர் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இவருக்குப் பிறகு அந்த பொறுப்பை ஏற்று யாரும் எதிர்பாராத வகையில் மிகச் சிறப்பாக செய்தவர் புஜாரா. ஆனால் தற்போது அவருக்கு அணியில் இல்லாமல் வெளியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் இந்த சீசனில் 50 ஸ்ட்ரைக் ரேட்டில், 76 ஆவரேஜில் ரன்கள் குவித்து கொண்டு வருகிறார்.

அவர் மெதுவாக விளையாடுகிறார் என்பது குறித்தும், இங்கிலாந்து பாஸ்பால் முறையில் எப்படி விளையாடுகிறது என்பது குறித்தும் மனம் திறந்து தன்னுடைய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் மெதுவாக விளையாடுகிறேன் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நான் கண்டிஷனுக்கு தகுந்தபடிதான் விளையாடுகிறேன். இந்தியாவில் விளையாடும் பொழுது அரைசதம் அடிப்பதற்கு எனக்கு நிறைய பந்துகள் தேவைப்படாது. அதே சமயத்தில் இங்கிலாந்தில் தேவைப்படும். ஏனென்றால் அங்கு நிலைமைகள் அப்படி இருக்கும். அந்த நிலைமையை மதிக்க வேண்டும். அதுதான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பாரம்பரிய முறை.

ஆனால் இங்கிலாந்து அதிகமாக தாக்குதல் பாணியில் விளையாடுகிறது. ஆனால் குறிப்பிட்ட ஆடுகளங்களில் மட்டுமே அப்படி விளையாடுகிறது. மேலும் முன்பு போல டியூக்ஸ் பந்தில் அசைவுகள் இல்லை. முன்பு இங்கிலாந்திலும் கிரிக்கெட் வேறு விதமாகத்தான் இருந்தது. விளையாட்டு வேகமாக மாறுகிறது. வீரர்கள் நிறைய ஷாட்கள் விளையாடுகிறார்கள். ஆடுகளங்களும் அதை அனுமதிக்கின்றன.

நான் என்னுடைய பலத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அணிக்கு உதவும். மேலும் அடுத்து பேட்டிங் செய்ய வரக்கூடியவர்களுக்கும் உதவும். மேலும் கிரிக்கெட்டில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்று சிந்திப்பதை விட, உங்கள் அணி வெற்றி பெறுகிறதா? என்பதுதான் முக்கியம்.

இதையும் படிங்க : “நானும் ஆண்டர்சனும்.. இந்த இந்திய வீரர் பற்றிதான் பேசிக்கிட்டே இருந்தோம்” – இங்கிலாந்து ராபின்சன் பேட்டி

நீங்கள் பாசிட்டிவாக விளையாடிய அணிக்கு வெற்றியை கொண்டு வந்தால் நல்லது. ஆனால் தைரியமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் நீங்கள் சரியாக விளையாடாமல் அணிக்கு தோல்வி வந்தால் என்ன செய்வது? இதைப் பெருமையாக சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. விளையாட்டை விளையாட பல வழிகள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.