ஐபிஎல்

எலிமினேடர் போட்டியில் அதிரடி சதம் விளாசிய ரஜத் பட்டிதர் – எந்த வீரரும் செய்யாத பல சாதனகளை படைத்த இளம் பெங்களூர் வீரர்

நடப்பு ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் மிக முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியும், பெங்களூர் அணியும் லக்னோ அணியும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் வெல்பவர்கள் ராஜஸ்தான் அணியோடு இறுதிபோட்டிக்கான குவாலிபையர் போட்டியில் விளையாட வேண்டும். தோற்பவர்கள் வெளியேற வேண்டும்.

- Advertisement -

போட்டி நடக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன் பகுதியில் இன்று மழை அச்சுறுத்தல் இருந்தது. இது பெங்களூர் அணி இரசிகர்களை வெகுவாகக் கவலையடைய வைத்திருந்தது. ஏனென்றால் போட்டி மழையால் நடக்காவிட்டால், பெங்களூர் அணியை விட அதிகப் புள்ளிகளோடு இருக்கும் லக்னோ அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதற்கு ஏற்றார்போல் டாஸ் போடும் நேரத்தில் பலத்த காற்று வீச, டாஸ் தள்ளி வைக்கப்பட்டு, மைதானம் தார்பாய்களால் மூடப்பட்டது. இது மேலும் பெங்களூர் அணி இரசிகர்களைக் கவலைப்படுத்தியது. ஆனால் சற்றுத் தாமதமாக நிலைமை சீர் அடைந்ததால் போட்டி துவங்கியது.

டாஸில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணியின் பேட்டிங்கை துவங்க வந்த பாஃப் டூ பிளிசிஸ் மோசின்கான் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் விராட்கோலி ஆடுகளத்தை, ஆட்ட சூழலைப் புரிந்து மெதுவாக ஆட ஆரம்பித்தார்.

- Advertisement -

இந்த நிலையில்தான் மூன்றாவது வீரராய் களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார் இருந்த மோசமான சூழலை அப்படியே பெங்களூர் அணியின் பக்கம் திருப்பிவிட்டார். பவர்ப்ளேவின் கடைசி ஓவரை க்ரூணால் பாண்ட்யா வீச, 19 ரன்களை எடுத்து, பவர்ப்ளேவை பெங்களூர் அணியுடையதாய் மாற்றினார்.

அடுத்துப் பொறுமைக்காட்டி ஆடி அரைசதமடித்த அவர், மேக்ஸ்வெல்லும், மகிபால் லோம்ரரும் ஆட்டமிழந்து தினேஷ் கார்த்திக் உள்ளே வர தன் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். பிஷ்னோய் வீசிய 16வது ஓவரில் மூன்று சிக்ஸர் இரண்டு பவுண்டரி என மொத்தம் 27 ரன்களை நொறுக்கி எடுத்து, அடுத்தடுத்த ஓவர்களில் அபாரமாய் விளையாடி சதமடித்து தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த ஆட்டத்தில் 54 பந்துகளில் 112 ரன்களை 12 பவுண்டரி, ஏழு சிக்ஸரோடு எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஐ.பி.எல் ப்ளேஆப்ஸில் எலிமினேட்டர் ஆட்டத்தில் ரஜத் பட்டிதார்தான் முதல் சதம் அடித்திருக்கிறார். பெங்களூர் அணிக்காக ப்ளேஆப்ஸ் போட்டியில் முதல் சதம் அடித்தவரும் ரஜத் பட்டிதார்தான். இந்த வருடத்திற்கு முன் பெங்களூர் அணியில் இருந்த இவரை, இந்த ஆண்டு ஏலத்தில் பெங்களூர் அணி மட்டுமல்லாது, எந்த அணிகளும் ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியில் லுவ்னித் சிஸோடியா பயிற்சியில் காயமடையவே, பெங்களூர் அணி மீண்டும் ரஜத் பட்டிதாரை இருபது இலட்சத்திற்கு வாங்கி இருந்தது.

மேலும் ரஜத் பட்டிதார் ஐ.பி.எல்-ல் அன்கேப்படு இந்திய வீரர்களில் சதமடித்த நான்காவது வீரராகவும், மொத்தத்தில் ஐந்தாவது வீரராகவும் இணைந்துள்ளார். மேலும் ப்ளேஆப்ஸில் சதமடித்த ஐந்தாவது வீரராகவும் இணைந்துள்ளார்.

அன்கேப்படு வீரர்களில் சதமடித்தவர்கள் :

115 ஷான் மார்ஷ் பஞ்சாப் / ராஜஸ்தான், 2008
120* பால் வல்தாட்டி பஞ்சாப் / சென்னை, 2011
114* மனீஷ்பாண்டே பெங்களூர் / டெக்கான், 2009
101* தேவ்தத் படிக்கல் பெங்களூர் / ராஜஸ்தான், 2021
112* ரஜத் பட்டிதார் பெங்களூர் / லக்னோ, 2022

ப்ளேஆப்ஸில் சதமடித்தவர்கள் :

முரளி விஜய்
வீரேந்தர் சேவாக்
விர்திமான் சஹா
ஷேன் வாட்சன்
ரஜத் பட்டிதார்

Published by