மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்ட பேட் கம்மின்ஸ் விலகல்; 3வது டெஸ்டில் புதிய கேப்டன்!

0
615

மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார் பேட் கம்மின்ஸ். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்திருக்கிறது.

இந்தியாவிற்கு வந்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டிலும் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை சந்தித்து தொடரில் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

கடைசி இரண்டு போட்டிகள் அகமதாபாத் மற்றும் இந்துர் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தூர் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதியும், அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் நான்காம் டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதியும் துவங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். ஓரிரு தினங்களில் அணிக்கு திரும்பி வந்துவிடுவார் என்று ஆஸி., அணியின் தரப்பில் இருந்து தகவல்கள் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, பேட் கம்மின்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாட உள்ளார் என்று அணி நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி அதிகாரப்பூர்வமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் இருந்து துவக்க வீரர் வார்னர் கையில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகினார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருந்த ஹேசல்வுட் மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டார்.

ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குள் அவர் வந்து விடுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆஸ்டன் அகர், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளின் திட்டத்தில் இல்லை. இதனால் உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். அங்கு சென்று உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார். அதன் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வந்து ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.