ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தான் இதுவரை எதிர்கொண்ட கிரிக்கெட் வீரர்களிலேயே ஒவ்வொரு நாட்டு அணியிலும் மிகவும் சவாலாக இருந்த டஃப்பஸ்ட் பிளேயர்களைத் தேர்வு செய்து பேசி இருக்கிறார்.
பிரைம் வீடியோ ஸ்போர்ட்ஸ் சோஷியல் மீடியா வீடியோவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் டஃப் பிளேயர்கள் குறித்து பேட் கம்மின்ஸ் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
முக்கியமாக இந்தியா சார்பில் புஜாராவையும், நியூசிலாந்து சார்பில் மெக்கல்லத்தையும், பாகிஸ்தான் சார்பில் சயீத் அஜ்மலையும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்போது “இந்தியாவில் புஜாரா தான் மிகவும் டஃப்பான பிளேயர். அவருடைய விக்கெட்டை எடுப்பது மிகவும் கஷ்டம். ஆயிரம் முறை பேப்பரால் வெட்டுவது போன்ற வலியை அவர் தருவார். அவருக்கு தேவை என்றால் 100 டாட் பால்ஸ் ஆடக்கூட தயங்க மாட்டார். பௌலர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் தர மாட்டார். நியூசிலாந்தில் பிரண்டன் மெக்கல்லம் டாப் ஆரடரில் அதிரடியாக ஆடும்போது அவரை எதிர்கொள்வது சவாலாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பாகிஸ்தான் குறித்து பேசும்போது “பாகிஸ்தான் பிளேயர்களில் சயீத் அஜ்மல் தான் டஃப். ஓவரின் கடைசி பாலில் நான் பேட்டிங் செய்ய க்ரீஸுக்குள் வந்தேன். சயீத் அஜ்மல் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனேன். அது என்னவென்று யோசிப்பதற்குள் விக்கெட் போய்விட்டது, அப்படி ஒரு பௌலிங்கை நான் பார்த்ததே இல்லை” என்று கூறி இருக்கிறார்.






