வங்கதேசம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி.
இன்று டி20 உலக கோப்பை தொடரில் நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலபரிட்சை மேற்கொண்டன. இரு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா ?போட்டி என்பதால் முதல் பந்தில் இருந்து ஆட்டத்தில் விறுவிறுப்பு காணப்பட்டது.
அடிலேய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச அணிக்கு துவக்க வீரர் சான்டோ அரை சதம் அடித்து, 54 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்.
அடுத்து அதிகபட்சமாக அபிப் 24 ரன்களும் சௌமியா சர்க்கார் 20 ரன்களும் எடுத்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில் அசத்திய சாஹின் அப்ரிடி நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் அடித்திருந்தது.
128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சற்று எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இம்முறை துவக்க ஜோடி சற்று நம்பிக்கை அளித்தது. ரிஸ்வான் 32 ரன்களும் பாபர் அசம் 25 ரன்களும் அடித்து நம்பிக்கை கொடுத்துவிட்டு ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அசத்திய ஹாரிஸ், இம்முறையும் 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருந்தார். 14 பந்துகளில் 24 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சான் மசூத் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை உறுதி செய்து கொடுத்தார்.
18.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்து இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதே கடினம், வெளியேறிவிடும் என்று எண்ணி இருந்தபோது, தென்னாபிரிக்க அணி நெதர்லாந்திடம் தோல்வியை தழுவியதால் மீண்டும் நம்பிக்கை பிறந்தது. தற்போது அந்த கனவை நனவாக்கி அரை இறுதிக்குள் நுழைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.