இந்த வேகப்பந்து வீச்சாளரின் பந்துகளைச் சமாளிக்க சிரமப்பட்டுள்ளேன் – முஹம்மது ரிஸ்வான்

0
1133
Mohammad Rizwan

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முஹம்மது ரிஸ்வான் கடந்த ஆண்டு 29 டி20 போட்டிகளில் 1326 ரன்கள் குவித்தார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 73.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 134.89 ஆகும். குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் 6 போட்டிகளில் மூன்று அரை சதங்களுடன் 281 ரன்கள் குவித்தார். உலக கோப்பை டி20 தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 70.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.22 என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் சக்கை போடு போட்ட அவர் தான் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் யார் என்று தற்போது கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடைய சிறந்த பேட்டிங் பெர்பார்மன்ஸ் எது என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டமே தன் சிறந்த ஆட்டம்

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 52 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் 67 ரன்கள் குவித்தார். இருப்பினும் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அந்தப் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னால் முஹம்மது ரிஸ்வானுக்கு நெஞ்சுப் பகுதியில் தொற்று இருந்தது. அதன் காரணமாக அந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரண்டு நாட்கள் முழுவதுமாக ஐசியூவில் இருந்தார். ஐசியூவில் இருந்த அவர் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் உடல் தகுதியை நிரூபித்து, மறுநாளே வந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக சிறப்பாகவும் விளையாடினார்.

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்னர் உடனடியாக வந்து விளையாடியது தனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்று ரிஸ்வான் தற்பொழுது கூறியுள்ளார். அந்த அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டமே, தன் மனதிற்கு மிகவும் பிடித்த ஆட்டம் என்று ரிஸ்வான் தற்போது கூறியுள்ளார்.

- Advertisement -

ஜோஷ் ஹேசல்வுட் பந்துவீச்சு எனக்கு எப்போதும் சவாலாக இருக்கும்

நான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் நான் சிரமபட்டு விளையாடிய பந்து வீச்சாளர் யார் என்றால் ஜோஷ் ஹேசல்வுட் தான். குறிப்பாக அரை இறுதி ஆட்டத்தில் அவருடைய பந்து வீச்சுக்கு எதிராக விளையாடியது மிக கடினமாக இருந்தது. அந்தப் போட்டி நடைபெற்ற மைதானம், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பநிலை அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தது. மிக சவாலாகவே அந்த போட்டி அன்று இருந்தது என்றும் கூறியுள்ளார்.

ரிஸ்வான் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சுக்கு எதிராக சிரமப்பட்டு விளையாடியதாக கூறியிருந்தாலும், அன்று நடைபெற்ற போட்டியில் ஜோஷ் ஹேசல்வுட் எந்த ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் 4 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அந்த போட்டியில் அவரது பவுலிங் எக்கானமி 12.25 என்பது குறிப்பிடத்தக்கது