“எங்க வெற்றிகளுக்கு முக்கிய காரணம் இந்திய அணிதான்!” – அதிரடி கிளப்பிய ஆப்கான் பயிற்சியாளர்!

0
60497
Trott

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை சிறிய அணியான ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தி இருக்கிறது.

ஒரு பக்கம் உலகச் சாம்பியன் இங்கிலாந்து அந்த அணி மீது இருந்த எதிர்பார்ப்பை முற்றிலுமாக ஏமாற்றி இருக்க, ஆப்கானிஸ்தான் அணி ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடருக்கே சுவாரசியத்தைக் கூட்டிய அணியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என நான்கு அணிகளை வீழ்த்தி, தற்பொழுது புள்ளி பட்டியலில் நியூசிலாந்துக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மேலும் கடைசி இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சந்திக்க இருக்கிறது. இரண்டு ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்ற காரணத்தினால் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இருக்கிறது.

அந்த அணி விளையாடி வருகின்ற விதத்தில் பெரிய அணிகளை வீழ்த்த முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே ஆப்கானிஸ்தான் அணியை யாரும் எச்சரிக்கையாகத்தான் எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறும் பொழுது ” இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தோம் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் போட்டியில்தான் எங்களுடைய பார்ம் கொஞ்சம் வருவதை நாங்கள் கண்டோம். இந்திய அணியுடன் தோல்வி அடைந்தும் அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளிலும் ஆசியக் கோப்பையிலும் வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்து நாங்கள் வெற்றியை தவற விட்டு இருந்தோம். ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தால் கூட நம்பிக்கையுடன் விளையாடினால் வெற்றிகளை பெற முடியும் என்று நான் சொல்லியிருந்தேன்.

எனவே நாங்கள் மீண்டும் சில விஷயங்களில் நல்ல முறையில் இருக்க வேண்டும். மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு நாங்கள் முன்னேறி செல்ல வேண்டும். நான் பல விஷயங்களைப் பார்த்த வரையில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நாங்கள் நல்ல நிலைக்குச் செல்வோம் என்று நம்புகிறேன்.

இன்னும் ஏராளமான வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த இரண்டு நாட்கள் மும்பையில் பயிற்சி செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராக வேண்டும்!” என்று நம்பிக்கையாகக் கூறியிருக்கிறார்!