இந்தியா கடந்த வருடம் இங்கிலாந்திற்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்தது. இதில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கோவிட் காரணத்தைக் கூறிய இந்திய அணி விளையாடவில்லை. அப்பொழுது அடுத்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்தது.
தற்போது இங்கிலாந்திற்கு மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் இங்கிலாந்திற்குச் சென்றுள்ள இந்திய அணி, கடந்த ஆண்டு உறுதி அளித்தபடி தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது.
முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சதங்களால் மீண்டு எழுந்தது. கடைசி நேரத்தில் இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரீட் பும்ரா பேட்டிங்கில் அதிரடி காட்ட 400 ரன்களை தாண்டி 416 ரன்கள் குவித்தது.
அடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியும் ஆரம்ப ஐந்து விக்கெட்டுகளை நூறு ரன்களுக்குள் இழந்து, பின்பு ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 284 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் முன், இங்கிலாந்து வந்த நியூசிலாந்து அணியோடு மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து, அடுத்து வந்த விக்கெட்டுகள் அதிரடியாய் ரன் குவித்து, நியூசிலாந்தை 3-0 என வொய்ட் வாஷ் செய்து அனுப்பியது. ஆனால் இந்திய அணியிடம் இது எடுபடவில்லை. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் செய்யாததை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் செய்தனர்.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 66 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய மொகம்மத் சிராஜ் இதுபற்றிப் பேசியுள்ளார். அதில் அவர் “நியூசிலாந்து தொடரைப் பார்த்தப் பொழுது, அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 140கி.மீ வேகத்தில் வீசுபவர்கள் கிடையாது, நாங்கள் 140கி.மீ வேகத்தில் வீசக்கூடியவர்கள் என்று உணர்ந்தோம். இதுதான் எங்களின் பலம். நாங்கள் அவர்களின் அவர்களின் பலவீனங்களை ஆராய்ந்தோம். இதுதான் வெற்றிக்குக் காரணம்” என்று கூறியிருக்கிறார்!