“இப்ப நான் இந்த மாற்றங்களை செஞ்சிருக்கேன்.. முடிஞ்சா அடிக்கட்டும்” – ஆட்டநாயகன் அக்சர் படேல்

0
518
Axar

இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நான்கு ஓவர் பந்துவீசி, இரண்டு முக்கிய விக்கெட் கைப்பற்றி, 17 ரன்கள் மட்டும் விட்டுத்தந்த அக்சர் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி பவர் ப்ளேவில் மிகச் சிறப்பாக ஆரம்பித்தது.

- Advertisement -

இந்த நிலையில் பவர் பிளேவில் அக்சர் படேல் பந்து வீச வந்து முதலில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஜட்ரன் விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து இரண்டாவது முறை பந்து வீசப்படும் பொழுது அதிரடியாக அரை சதம் அடித்திருந்த குல்பதின் நைபை விரட்டினார்.

தற்பொழுது அக்சர் படேல் எந்த இடத்திலும் ஆட்டத்தில் பந்து வீச தயாராக இருப்பதாக தெரிகிறார். உலகக் கோப்பை தொடரில் காயத்தின் காரணமாக இடம்பெற முடியாத அவர், அந்த நேரத்தில் தனது பந்துவீச்சில் சில முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறார். கிரீசை பயன்படுத்தி வீசுவதும், மெதுவாக வீசுவதும் என மாற்றங்களை கொண்டு வந்ததாக முன்பே கூறியிருந்தார்.

அவருடைய கடைசி ஆறு சர்வதேச டி20 போட்டிகளில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்திருக்கிறார். மேலும் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால், அவருடைய இந்த திடீர் எழுச்சி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆட்ட நாயகன் விருது பெற்ற அக்சர் படேல் பேசும் பொழுது “நான் இப்பொழுது நன்றாக உணர்கிறேன். ஒட்டு மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறேன் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்திய அணிக்காகச் சிறப்பாக செயல்படுவதுதான் முக்கியம். சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் எத்தனை விக்கெட்டுகள் எடுத்தேன் என்பது நினைவில் இருக்காது.

நான் இப்பொழுது சற்று மெதுவாக பந்து வீச முயற்சிக்கிறேன். என்னுடைய லென்த்தை மாற்றி அமைத்து இருக்கிறேன். நான் இப்பொழுது இந்த விஷயங்களை மிக நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

இப்போது பவர் பிளே என்று மட்டும் இல்லாமல் ஆட்டத்தின் எல்லா இடங்களிலும் என்னால் பந்து வீச முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது. டி20 கிரிக்கெட் பொருத்தவரை நீங்கள் மனரீதியாகத் தயாராக வேண்டும்.

டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு விக்கெட் கிடைக்கும் அதே பந்தில் ஒரு நாள் நீங்கள் சிக்ஸரும் அடிக்கப்படுவீர்கள். முன்பெல்லாம் என் பந்துவீச்சில் ஹிட் பண்ணினால், நான் உடனே எனது திட்டங்களை மாற்றுவேன்.

ஆனால் நான் இப்பொழுது எனது திட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், பேட்ஸ்மேனையே எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்ள விட்டு விடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.