நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக செலவு செய்து கொள்ள 5 கோடியை பயன்படுத்தலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்களிடமிருந்த பணத்தை விட கூடுதலாக 5 கோடி பணத்தை பெற்றார்கள். இதன் காரணமாக இந்த முறை சில வீரர்கள் அதிக ஏலத்திற்கு போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகத் துல்லியமாக கணித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இருவரும் 15 கோடியை தாண்டுவார்கள் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் இந்த இருவரும் ஐபிஎல் தொடரில் புது வரலாற்றை படைத்து விட்டார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என யாரும் இதை எதிர்பார்க்கவே இல்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உடன் போட்டியிட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு பேட் கம்மின்சை வாங்கியது. இன்னொரு பக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணி உடன் ஏலத்தில் போரையே நடத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த இருவரும் அதிக தொகைக்கு ஏலம் போனதில் மிக முக்கியமான ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் தொடர் விளையாடவில்லை என்று அறிவித்தவர்கள். மேலும் ஸ்டார்க் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் விளையாடாமல் இருந்து வந்தார்.
இதுபோன்ற நிலைமை இருந்தும் கூட அணிகள் இவர்கள் இருவருக்கும் பெரிய முக்கியத்துவம் கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் கம்மின்ஸ் டி20 கிரிக்கெட்டில் சிறந்தவர் கிடையாது. அதேபோல் ஸ்டார்க் சமீபத்தில் சிறப்பாக இல்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அவரை விளையாடும் அணியில் இருந்து அணி நிர்வாகம் கழட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் விளையாடாதது குறித்து பேசி உள்ள ஸ்டார்க் கூறும் பொழுது “நான் சில விஷயங்களை தேர்வு செய்தேன். அதில் ஆஸ்திரேலியா தேசிய அணிக்கு விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருப்பது என்பது.
இது எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரிதும் உதவி செய்திருக்கிறது. கடந்து போன எல்லாவற்றிலுமே நான் மகிழ்ச்சி அடைகிறேன் வருத்தம் ஏதும் கிடையாது. தற்போது ஐபிஎல் தொடரில் இந்த தொகைக்கு நான் ஏலம் எடுக்கப்பட்டதில், நன்றி உணர்வுடனும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்த இரவை விவரிக்க நிறைய வார்த்தைகள் உண்டு!” என்று கூறியிருக்கிறார்!