இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு மறக்க முடியாத தொடராக அமைந்திருக்கிறது. இதனால் பந்துவீச்சாளர்களின் நிலைமை குறித்து சவுரவ் கங்குலி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடர் முதலில் மற்ற ஆண்டுகளில் நடைபெறும் தொடரை போலவே சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் சன் ரைசர்ஸ் அணி 277 ரன்கள் குவித்தது. பதிலுக்கு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு களமிறங்கும் ஒவ்வொரு அணியும் பெரும்பாலும் 200 ரன்களுக்கு குறைவில்லாமல் அடித்து நொறுக்குகின்றன. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து முறை 250 ரன்கள் குவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் பிளாட் டிராக்குகள் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மாறிவிட்டது. இதனால் பந்துவீச்சாளர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் தரமான ஒரு சில பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மட்டுமே பெரிதாக ரன்கள் செல்வதில்லை. மீதமுள்ள அனைத்து வீரர்களின் ஓவர்களிலும் சராசரியாக ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் சென்று விடுகிறது. மேலும் புதிய விதியான இம்பாக்ட் விதியின் வருகையாலும் ஒரு அணி 200 ரன்கள் குவித்தாலும் அதை எதிர் அணி சுலபமாகச் சேஸ் செய்து விடுகிறது.
இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பேசிய டெல்லி அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சவுரவ் கங்குலி பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சமமான ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என்று பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“டெல்லி மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஒரு அருமையான ஆடுகளம். மற்ற மைதானங்களை காட்டிலும் இது அளவில் சிறியது. எனவே இது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினம்.
பந்துவீச்சாளர்களுக்கு இது எளிதானதாக இருக்காது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் செல்லும் விதத்தைப் பார்க்கும்போது பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக வண்டி ஒரே நேர் கோட்டில் செல்கிறது. இது எதிர்காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு இடையே சரியான சமநிலை தேவை. எனவே இதே போல இனிவரும் காலங்களில் நடைபெறாது என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயத்தை 261 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி எட்டு பந்துகள் மீதும் வைத்து 262 ரன்கள் குவித்து அபாரமான வெற்றியைப் பெற்றது. பந்து வீச்சாளர்களுக்கு சுத்தமாகவே சாதகமாக இல்லாத நிலையைக் கண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் “பந்துவீச்சாளர்களை யாராவது காப்பாற்றுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.