நேற்று இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க வெற்றியில் மழை ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது.
இதற்கு அடுத்து மழை சிறிது நேரம் கழித்து நின்று மீண்டும் ஆட்டம் தொடங்கிய பொழுது, போட்டி பதினைந்து ஓவராக குறைக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் மழை நீர் முற்றிலுமாக மைதானத்தில் இருந்து வடியவில்லை. அப்படி சிறப்பான வசதிகள் தென் ஆப்பிரிக்க மைதானத்தில் இல்லை. தண்ணீர் மைதானத்தின் மேற்பரப்புக்கு அடியில் தேங்கியிருந்தது. இதனால் பந்து நன்றாக ஊறிவிட்டது.
எனவே பந்து பேட்டுக்கு அடிக்க வசதியாக வழுக்கி சென்றது. இந்திய பந்துவீச்சாளர்களால் பந்தை நன்றாக பிடித்து வீச முடியவில்லை. எனவே இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக நேற்று அமைந்தது. இந்திய அணி எடுத்திருந்த 180 ரன்கள், அந்த மைதானத்தில் மிகவும் நல்ல ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணியின் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் இந்தியாவின் தோல்வி குறித்து கூறும்பொழுது ” இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசியது. ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஃபீல்டர்கள் சரியான திசையில் இருந்தார்கள். ஆனால் பந்து அவர்களை விட்டு கொஞ்சம் தாண்டி சென்றது. மேலும் அப்படி ஆன பந்துகள் பவுண்டரிக்கும் சென்றது.
நேற்றைய போட்டியில் மைதானம் விளையாடுவதற்கு கடினமாக இரண்டாம் பகுதியில் மாறியது. காரணம் பனிப்பொழிவு கிடையாது மழைதான் காரணம். இதன் காரணமாக பந்து நன்றாக வழுக்கி சென்றது. பேட்டிங் செய்ய கொஞ்சம் கொஞ்சமாக சாதகமாக மாறியது. இந்த வகையில் இந்திய அணி துரதிஷ்டமானது.
நேற்றைய போட்டி நாளின் முடிவில் இந்திய அணிக்கு சில விஷயங்கள் தவறான முறையில் போய் விட்டன. அவர்கள் முதலில் டாசை இழந்தார்கள். பின்னர் அவர்கள் கடினமான இரண்டாம் பகுதியில் பந்து வீச வந்தார்கள். இது உண்மையில் இந்தியா ஆராய கூடிய ஆட்டமே கிடையாது. எந்த இடத்தில் தோற்றோம் என்பது குறித்து எல்லாம் இந்தியா தங்களுக்குள் எதையும் யோசிக்க தேவையில்லை. அவர்கள் கடினமான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடினார்கள்!” என்று கூறி இருக்கிறார்.