நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெல்லாவிட்டால், கடைசிப் போட்டியில் வென்று ரன் ரேட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற நெருக்கடியில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என்று மேகமூட்டமான வானிலையை நம்பி அறிவித்தார். ஆனால் விளைவுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே அமைந்தது.
நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வே 35 ரன்கள் எடுத்து வெளியேற, இதற்கு அடுத்து ரச்சின் ரவீந்தரா உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து அசத்தலாக விளையாட ஆரம்பித்தார். மிகச் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 95 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது சதம் அடித்து அசத்தினார். அவர் 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 108 ரன் எடுத்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து வந்த டேரில் மிச்சல் 29, மார்க் சாப்மேன் 39, கிளன் பிலிப்ஸ் 41, மிட்சல் சான்ட்னர் 26 * என அதிரடியாக ரன்கள் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து அசத்தியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக அடிக்கப்பட்ட 400 ரன்கள் இதுவாகும்.
இந்த போட்டியில் தற்போது ஐசிசி வந்துச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷாகின் அப்ரிடி பத்து ஓவர்கள் பந்து வீசி 90 ரன்கள் விட்டு தந்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பாகிஸ்தான் பந்துவீச்சாளர் தந்த அதிகபட்ச ரன்கள் இதுவாக பதிவாகி இருக்கிறது. ஹாரிஸ் ரகுப் 85 மற்றும் 83 ரன்கள் ஏற்கனவே தந்திருக்கிறார். ஹசன் அலி இந்தியாவுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு 84 ரன்கள் தந்து இருக்கிறார்.
மேலும் ஷாகின் ஷா அப்ரிடி கடந்த 24 இன்னிங்ஸ்க்கு பிறகு விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் இந்த போட்டியில் வெளியேறி இருக்கிறார். தற்பொழுது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது அணிக்காக அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர் என்கின்ற மோசமான சாதனையைச் செய்திருக்கிறார்!