டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த பட்டியலை இன்று அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்டது.
டி20 உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்பதற்காக பல்வேறு அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் தங்களது வீரர்களை அறிவித்தனர். இன்று நியூசிலாந்து அணி தங்களது 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
நியூசிலாந்து அணி இவ்வளவு தாமதமாக வெளியிடுவதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் இருக்கும் சில வீரர்கள் சமீபத்தில் தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர். மேலும் நியூசிலாந்தின் நிர்வாகத்துடன் ஆன ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறினர். ஆகையால் அவர்களது இடத்தை நிரப்புவதற்கும் புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கும் கால அவகாசம் தேவைப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு வழியாக செப்டம்பர் 20ஆம் தேதி வெளியிட்ட இந்த பட்டியலில் சில முக்கிய வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். சில முக்கிய வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஜிம்மி நீசம் ஆகிய இருவரும் நியூசிலாந்து அணி ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினர். அவர்கள் இருவருக்கும் டி20 உலக கோப்பை அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் பின் ஆலன் சமீபத்தில் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவருக்கும் இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிரேஸ் வெல் இந்த ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை கொடுத்ததால் அவருக்கும் இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அ
னுபவம் மற்றும் இளம் வீரர்கள் என்ற கலவையாக இந்த அணி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
15 பேர் கொண்ட நியூசிலாந்து உலகக்கோப்பை அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன், டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாக்கி பெர்குசன், டெவோன் கான்வே, மைக்கேல் சாப்மேன் , ட்ரெண்ட் போல்ட், ஃபின் ஆலன்.