சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் 21 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.
இதில் 101 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்தரா 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 108 ரன்கள் குவித்து அபாரமான சதம் விளாசி ஆட்டம் இழந்தார். மறுமுனையில் வில்லியம்சன் 94 பந்துகளை எதிர் கொண்டு 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என அபாரமாக விளையாடி சதம் அடித்து 102 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதிக்கட்டத்தில் கிலென் பிலிப்ஸ் 27 பந்துகளில் 46 ரன்கள் குவிக்க நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 17 ரன்னில் வெளியேற, கேப்டன் பவுமா மற்றும் வாண்டர்சன் ஜோடி இரண்டாவது விக்கட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில் பவுமா 56 ரன்னில் வெளியேற, வண்டர்டசன் 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு தென்னாபிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. இதில் மிடில் வரிசை ஆட்டக்காரர் டேவிட் மில்லர் மட்டும் ஒரு முனையில் நின்று போராட மற்றவர்கள் அனைவரும் விரைவாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க:ரோஹித் இதில் அதிர்ஷ்டசாலி.. பம்பரமாய் சுற்ற அவர் இருக்கும்போது கேப்டனுக்கு கவலையில்லை – பாக் பசித் அலி
இதனால் தென் ஆப்பிரிக்க அணி இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 67 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என இறுதிக்கட்டத்தில் 100 ரன்கள் குவித்தார். இதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.