மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் நீக்கம்.. ஹர்திக் புதிய கேப்டனாக வந்தது ஏன்? ஜெயவர்த்தனே வெளியிட்ட தகவல்!

0
1402
Rohit

உலகெங்கும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் எல்லாவற்றிலும் முதல் நிலையில் இருந்து வருகிறது.

இப்படியான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே மிகப்பெரிய வெற்றி அடைந்த அணிகளாக, மேலும் வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளில் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட அதிக சந்தை மதிப்பு கொண்ட அணியாக இருக்கிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்பாகவே ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் அணி என்கின்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்தது.

இந்த ஐந்து முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையில் ஐபிஎல் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா 2013 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்ற உடனே ஐபிஎல் தொடரை வென்றார். இதற்கு அடுத்து 2015, 2017, 2019 மற்றும் 2020 என மொத்தமாக ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் ஐபிஎல் தொடரை வென்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மிகப்பெரிய டிரேடிங் நிகழ்வாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டுவரப்பட்டார்.

ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறும் பொழுது ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிரடியாக மும்பை இந்தியன்ஸ் அணி வருகின்ற 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்திருக்கிறது. ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்த்தப்பட்டு அவருடைய 10 வருட கேப்டன்சி முடிவுக்கு வருகிறது.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் குளோபல் பெர்ஃபார்மென்ஸ் தலைவர் மகலே ஜெயவர்த்தனா கூறும் பொழுது “இது பாரம்பரியத்தை கட்டி எழுப்புதல் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்கின்ற மும்பை இந்தியன்ஸ் தத்துவத்திற்கு உண்மையாக நடந்து கொள்வது. மும்பை இந்தியன்ஸ் எப்பொழுதுமே சச்சின், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன், ரோகித் சர்மா என விதிவிலக்கான தலைமைத்துவம் கொண்ட கேப்டன்களால் ஆசீர்வதிக்கப்பட்டது.

எதிர்காலத்திற்காக அணியை வலுப்படுத்துவதில் ஹர்திக் பாண்டியா 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார்!” என்று கூறப்பட்டிருக்கிறது!