கிரிக்கெட் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாமல் நடந்து கொள்வார்கள். தனது அணி வீரர்களுக்கு அல்லது தனது அணிக்கு எது தேவையோ அதன் படி நடந்து கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் விளங்குவார்கள். உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் ஜென்டில்மேன் கிரிக்கெட் வீரர் ஆவார்.
சச்சின் டெண்டுல்கரை போலவே இந்திய அணியில் மகேந்திர சிங் தோனியும் ஜென்டில்மேன் கிரிக்கெட் வீரராக இருந்திருக்கிறார். நிறைய சந்தர்ப்பத்தில் மற்றும் சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி சற்றும் சுயநலமில்லாமல் நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். அப்படி அவர் சுயநலமில்லாமல் செய்த ஒரு சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்
1. மகேந்திர சிங் தோனி மற்றும் சௌரவ் கங்குலி
2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4 ஆவது டெஸ்ட் போட்டி கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியாகும். அந்தப் போட்டிக்கு மகேந்திர சிங் டோனி தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.
கிட்டத்தட்ட இந்திய அணி வெற்றி பெறும் நிலைமையில் இருந்தது. ஒரு விக்கெட் கைப்பற்றினால், இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்பொழுது மகேந்திர சிங் தோனி சவுரவ் கங்குலியை கேப்டன்சி செய்ய அழைத்தார். கடைசி டெஸ்ட் போட்டியை அவருக்கு இன்னும் மறக்கமுடியாத படி அமைய அவர் அந்த மாதிரி செய்தார். இந்த சம்பவம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.
2. மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி 2013
2013-ம் ஆண்டு இந்தியா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய முத்தரப்பு ஒருநாள் தொடரில், ஒரு போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக விராட் கோலி தலைமை தாங்கினார். அந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி சிறிய காயத்துடன் ஓய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் குணமாகி இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணியை வழிநடத்தி இலங்கைக்கு எதிராக இந்திய அணியை வெற்றி பெற வைத்து தொடரையும் கைப்பற்றினார். கோப்பையை கைப்பற்றிய கேப்டன் என்கிற அடிப்படையில் மகேந்திர சிங் தோனியை நிர்வாகிகள் அழைத்த பொழுது மகேந்திர சிங் தோனி விராட் கோலியையும் அழைத்து கோப்பையை வாங்க வைத்தார்.
3. கோப்பையை இளம் வீரர்களுக்கு தருவது
மகேந்திர சிங் தோனி எந்த ஒரு தொடரிலும் கோப்பையை கைப்பற்றிய பின்னர் தனது அணியில் விளையாடிய இளம் வீரர்களுக்கு அந்த கோப்பையை கையில் கொடுப்பார். உதாரணத்திற்கு 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசி 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவரது திறமைக்கு பரிசு அளிக்கும் விதமாக கோப்பையை கைப்பற்றிய அடுத்த நொடியே கோப்பையை ரவீந்திர ஜடேஜா கையில் ஒப்படைத்தார். இது அவரிடம் இருக்கும் ஒரு திறமையான பண்பாக பார்க்கப்படுகிறது.
4. புதிய அணியை கட்டமைத்தது
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தவுடன் மகேந்திர சிங் தோனி தைரியமாக ஒருசில முடிவுகளை எடுத்தார். அணியில் இருக்கும் ஒரு சில சீனியர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பல இளம் வீரர்களை இந்திய அணியில் கொண்டு வந்தார். சீனியர் வீரர்கள் சேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ் போன்றவர்களை அணியிலிருந்து நீக்கி நிறைய இளம் வீரர்களை இந்திய அணியில் சேர்த்தார்.
அவர் செய்த அந்த செயல் அப்போது நிறைய பேருக்கு புரியாமல் போனாலும் அதன் பின்னர் தான் தெரிய வந்தது அவர் செய்தது சரி என்று. வருங்கால இந்திய அணி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு மகேந்திர சிங் தோனி செய்திருக்கிறார். இந்திய அணியின் நலனுக்காக சில கஷ்டமான முடிவுகளை தைரியமாக எடுத்தது மகேந்திர சிங் தோனியின் மற்றொரு தலைமை பண்பாக பார்க்கப்படுகிறது.
5. தனது மகளை பார்க்காமல் உலக கோப்பை தொடரில் விளையாடியது
Stadium debut for ZIVA, her first time into the dressing room pic.twitter.com/J3Aj9shKKx
— Mahendra Singh Dhoni (@msdhoni) April 22, 2015
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. எந்த ஒரு தகப்பனும் தனக்கு பிறந்த குழந்தையை உடனடியாக பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
ஆனால் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைத் தொடர்தான் முக்கியம் எனக் கருதி ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை தொடர் நடந்து முடிந்த பின்னர்தான் இந்தியா வந்து தனது மகளைப் பார்த்தார். அவன் நினைத்திருந்தால் ஒரு போட்டியில் விளையாடாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து தனது மகளை பார்த்து பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் இவ்வாறு செய்தது அனைத்து இந்தியர்களையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.
6. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தது
மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென ஒரு முடிவை வெளியிட்டார். அவர் நினைத்திருந்தால் முறையாக தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்து இறுதியாக ஒரு ஃபேர்வெல் போட்டி விளையாடிவிட்டு அதன்பின்னர் மகிழ்ச்சியாக ஓய்வுபெற்று இருந்திருக்கலாம்.
ஆனால் அவர் தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவ்வாறு செய்யவில்லை. டெஸ்ட் போட்டியில் மட்டுமல்லாது சர்வதேச போட்டியிலும் அவர் திடீரென தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டது அவரது சுயநலமில்லாத மனதை நமக்கு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
7. வின்னிங் ஷாட் அடிக்க விராட் கோஹ்லிக்கு வாய்பளித்தார்
#OnThisDay in 2014, a special gesture from MS Dhoni 🙌
— Wisden India (@WisdenIndia) April 4, 2021
When India needed just one in seven balls, Captain Cool played a perfect defensive stroke, giving Virat Kohli the chance to hit the winning runs. pic.twitter.com/XB4ecZ2Fzy
2014 உலக டி20 தொடரின் அரை இறுதிப் போட்டி மறக்க முடியாத ஒன்று. தென்னாபிரிக்காவுக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 9 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டன.19வது ஓவரின் 4வது பந்தில் விராட் கோஹ்லி பவுண்டரி அடித்தார். அதற்கு அடுத்தப் பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை கேப்டன் தோனியிடம் தந்தார்.
எப்பொழுதும் வின்னிங் ஷாட்டை எம்.எஸ்.தோனி தான் அடிப்பார். அது அனைவர் அறிந்த ஒன்று. ஆனால் முக்கியமான அரை இறுதிப் போட்டியில் வெற்றிக்கு பங்களித்த விராட் கோஹ்லி, அந்த வின்னிங் ஷாட்டை அடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் 19வது ஓவரின் கடைசி பந்தில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் டாட் செய்தார். அடுத்த ஓவரில் விராட் கோஹ்லி அந்த வின்னிங் ஷாட்டை அடித்து இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். தோனியின் இச்செயலை ரசிகர்கள் அனைவரும் விரும்பினார்.