தற்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து மெதுவாக பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய காயம் மற்றும் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றது குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வெறும் ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை தன்னுடைய மாயாஜால வேகப்பந்து வீச்சில் கைப்பற்றி, இந்திய அணியை அசைக்க முடியாத அணியாக நிலை நிறுத்தினார். அதே சமயத்தில் துரதிஷ்டவசமாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது.
இந்த நிலையில் மீண்டும் துரதிஷ்டம் அவரைத் தாக்க டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் காயத்தின் காரணமாக இடம் பெற முடியவில்லை. காயத்தை வைத்துக்கொண்டு ஊசி போட்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடியதால் காயம் பெரிதாக மாறிப்போனது. இந்த நிலையில் அணியில் இடம் பெற முடியாததால் அவரால் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் இடம் பெற முடியாமல் போனது.
தற்போது இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் முகமது சமி கூறும் பொழுது “விராட் கோலியும் இஷாந்த் சர்மாவும் என்னுடைய சிறந்த நண்பர்கள். நான் காயமடைந்த பொழுது என்னை தொடர்ந்து அழைத்து நலம் விசாரித்தார்கள். இன்று நான் தகுதியற்றவனாக வீட்டில் அமர்ந்திருந்து உலகக் கோப்பையை பார்த்த பொழுது, என் வீரர்கள் மற்றும் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதை பார்த்து நான் என்ன உணர்ந்தேனோ அதைத்தான் சொல்ல முடியும். ஆனால் எனக்கு அந்த வெற்றிப் பதக்கம் கிடைக்காது. நான் உலகக் கோப்பையை வெல்ல கனவு காண்கிறேன்.
நான் ஒருபோதும் சூழ்நிலைகளிலிருந்து ஓடிப் போனது கிடையாது. மேலும் நான் சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்ததும் இல்லை. நான் எவ்வளவு துன்பங்களை எதிர்கொள்கிறேனோ, அவ்வளவு வலிமையானவனாக மாறுவேன். கடந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களிலும் நான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். என்னுடைய நூறு சதவீதத்தை கொடுத்து இருக்கிறேன்.
இதையும் படிங்க : மகளிர் ஆசிய கோப்பை.. 14 ஓவர்.. பாகிஸ்தான் அணியை ஈசியாக வீழ்த்தி இந்தியா வெற்றி.. தொடரும் ஆதிக்கம்
நான் இப்பொழுது நன்றாக உணர்கிறேன். எனக்கு வலி குறைந்து இருக்கிறது. பயிற்சியை ஆரம்பித்து இருக்கிறேன். அதே சமயத்தில் நீங்கள் உடலுக்கு அதிக வேலை கொடுக்கும் பொழுது பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். இது எனக்கு காலப்போக்கில் பழகிவிட்டது. நான் மீண்டும் எனது பாதையில் செல்லத் தொடங்கி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






