இன்று இலங்கை தம்புல்லா மைதானத்தில் மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெகு எளிதாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். பாகிஸ்தான் வீராங்கனைகளால் இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்கள் எடுப்பது பெரிய சிரமமாக இருந்தது.
பாகிஸ்தான் அணியில் 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். அந்த அணிக்கு மிக அதிகபட்சமாக அமீனா 35 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து மிடில் வரிசையில் வந்த துபா ஹுசைன் 19 பந்தில் 22 ரன்கள், பாத்திமா சனா 16 பந்தில் 22* ரன்கள் எடுத்தார்கள்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா 3, ரேணுகா சிங், பூஜா வஸ்ட்ரேகர் மற்றும் ஸ்ரேயங்கா படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் செபாலி வர்மா 29 பந்தில் 40 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 31 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்கள். ஹேமலதா 11 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. நான் அப்படி கொண்டாட காரணம் இதுதான்.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் பேட்டி
இதற்கு அடுத்து ஆட்டம் இழக்காமல் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 11 பந்தில் 5 ரன், ஜெமிமா 3 பந்தில் 3 ரன் எடுக்க, இந்திய அணி 14.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் எந்த ஒரு இடத்திலும் சிறு ஆதிக்கம் கூட செலுத்த இந்திய அணி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






