உலககோப்பை பைனல்.. பிட்ச் தயாரிப்பில் இந்திய அணி தலையிட்டதை நான் பார்த்தேன் – முகமது கைஃப் குற்றச்சாட்டு

0
88
Kaif

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் 10 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, பதினோராவது போட்டியான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் முதலில் பேட்டிங் செய்து தோற்றது.

இந்தப் போட்டிக்கு அமைக்கப்பட்டிருந்த ஆடுகளம் பனிப்பொழிவு வருவதற்கு முன்பாக மிகவும் மெதுவாக இருந்தது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் சரியாக டைமிங் செய்து பந்தை அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் தட்டு தடுமாறி 240 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வந்ததும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் சதம் அடித்து, ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வெல்ல பேட்டிங்கில் முக்கிய காரணமாக இருந்தார்.

பொதுவாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் டாஸ் வென்று யாரும் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் இந்த முறை அதை தைரியமாக செய்தால். காரணம் அவர் ஆடுகளத்தை மிகவும் அருகில் இருந்து மிக சரியாக புரிந்து கொண்டிருந்தார் என்பதோடு, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது என்பது தான் உண்மை. ஆஸ்திரேலிய அணியை சிரமப்படுத்த மெதுவான ஆடுகளம் தயாரிக்க, ஆடுகளம் தொடர்பான ஐசிசி ஆடுகள தயாரிப்பாளர் அட்கிஸ்டனை அழுத்தம் கொடுத்து இந்தியா வெளியேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் மிகத் தைரியமாக பேசியிருக்கிறார். அவர் கூறும் பொழுது “நான் மூன்று நாட்கள் இறுதி போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தில்தான் இருந்தேன். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் மூன்று நாளில் ஒவ்வொரு முறையும் வந்து ஒரு மணி நேரம் ஆடுகளத்தின் பக்கத்தில் நின்றார்கள். ஆடுகளத்தின் நிறம் மாறுவதை நான் பார்த்தேன். ஆடுகளத்தில் தண்ணீர் ஊற்றவில்லை மேலும் கொஞ்சம் கூட புல்லை விட்டு வைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் மெதுவான ஆடுகளத்தை கொடுக்க இந்தியா விரும்பியது. யாரும் விரும்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் இருவரும் இருக்கிறார்கள் என்பதால் இந்தியா இப்படியான முடிவை எடுத்தது. ஆடுகளத் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கு எல்லாம் நடக்கிறது என்று சொல்கிறோம், ஆனால் உண்மையில் அப்படி கிடையாது. நாம் அவர்களிடம் சென்று ஆடுகளத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டாம், புல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் என்று சொல்லிவிடுகிறோம். சொந்த நாட்டில் நடப்பதால் இப்படியான அனுகூலங்கள் கிடைக்கிறது.

இதையும் படிங்க : வெறும் 6 ரன்.. டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி படைக்க இருக்கும் மாபெரும் சாதனை.. சேப்பாக்கத்தில் வெயிட்டிங்

மெதுவான ஆடுகளத்தில் பகலில் முதலில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமானது என்று இந்தியாவிற்கு எதிராக சென்னையில் விளையாடியதில் கம்மின்ஸ் புரிந்து கொண்டார். இதனால்தான் உலகக் கோப்பை இறுதி போட்டியில் யாரும் செய்யாதவாறு, டாஸ் வென்று அவர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.