நனவானது மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவு; 36 ஆண்டுகளுக்கு பின்பு உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா!

0
207
Meesi

கத்தார் நாட்டில் உலகக் கால்பந்து திருவிழா நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இன்று அந்த திருவிழாவில் இறுதி நாளான இறுதிப் போட்டி அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது!

இன்று அர்ஜென்டினா அணி பலம்மிக்க பிரான்ஸுக்கு எதிராக தற்காப்பு ஆட்டத்தை எப்படி அமைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், இதுவரை ஆடி வந்தபடியே தற்காப்பில் நான்கு வீரர்களை மட்டுமே வைத்து தைரியமாக களமிறங்கியது.

- Advertisement -

இது மட்டுமே அல்லாமல் அர்ஜென்டினாவின் ஆட்ட அணுகுமுறை மிகவும் தைரியமாக இருந்தது. எந்த வீரரும் தன்னுடைய வேலை இதுதான் என்று அதற்குள் தங்களை சுருக்கிக் கொள்ளவில்லை. முழுதாக இறங்கி விளையாடினார்கள்.

இதற்கு கை மேல் பலனாக நாக் அவுட் போட்டிகளில் களம் இறக்கப்படாத டிமரியா அருமையான பெனால்டி ஒன்றை வாங்கித் தர மெஸ்ஸி அதை கோலாக்கி முதல் கோலை பெற்று தந்தார். இதற்கு அடுத்து மீண்டும் மெஸ்ஸி மற்றும் சக அணி வீரரிடம் இருந்து கிடைத்த பந்தை டி மரியா மிகச் சிறப்பாக கோலாக்கி முதல் பாதியில் அர்ஜென்டினா அணியை 2-0 முன்னிலை பெற வைத்தார்!

ஆனால் இரண்டாவது பாதியில் எல்லாமே தலைகீழாக மாறியது. அர்ஜென்டினா வீரர் செய்த பெனால்ட்டியை கோலாக மாற்றிய கிலியன் ம்பாப்பே அடுத்த இரண்டு நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலை எட்ட வைத்தார்.

- Advertisement -

90 நிமிடத்தில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால். அடுத்து ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது. முதல் கூடுதல் நேர 15 நிமிடத்தில் ஒரு கோலும் விழவில்லை. ஆனால் இரண்டாவது கூடுதல் 15 நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் அபாரமாக கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். ஆனால் அடுத்த நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் பாரடைஸ் பெனால்டி செய்ய, மீண்டும் பிரான்சின் ப்பாப்பே பெனால்டி வாய்ப்பை கோலாக்கி ஆட்டத்தை சமநிலையை எட்ட வைத்தார்.

இதனால் ஆட்டம் பெனால்டி சூட் அவுட்க்கு சென்றது. இரு அணியும் முதல் வாய்ப்பை கோலாக மாற்ற, அடுத்த இரு வாய்ப்பை பிரான்ஸ் அணி தவறவிட, அர்ஜென்டினா அணி அடுத்த இரு வாய்ப்புகளையும் கோலாக மாற்ற, அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸிக்கு உலகக்கோப்பை ஒன்று மட்டுமே கனவாக இருந்து வந்தது. தற்போது அவரது கனவு நனவாகி உள்ளது!