எங்கப்பா இந்த 3 பேர டிவியில காட்டினார்.. எனக்கு ஃபாஸ்ட் பவுலர் ஆகற வெறி வந்தது இப்படித்தான் – மயங்க் யாதவ் பேட்டி

0
1581
Mayank

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், டெலியை சேர்ந்த 21 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் லக்னோ அணிக்கு அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய்க்கு இவரை லக்னோ அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கி இருந்தது.

முதல் சீசனில் இவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த ஐபிஎல் சீசனில் இவர் முதல் பயிற்சியின் போதே காயம் அடைந்து விளையாட முடியாமல் துரதிஷ்டவசமாக விலகினார். இந்த நிலையில் நேற்று கிடைத்த வாய்ப்பில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி, எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததோடு, பஞ்சாப் அணியிடமிருந்த வெற்றியை லக்னோ அணிக்கு கொண்டு வந்து தனியாளாக கொடுத்தார்.

- Advertisement -

இவர் அதிவேகமாக பந்து வீசுவதோடு, நல்ல கட்டுப்பாட்டோடும் துல்லியத்தோடும் வீசுகிறார். இவருடைய வேகம் இவருடைய நிலைத்தன்மையை பாதிப்பதில்லை. இதன் காரணமாக இவரிடமிருந்து மோசமான பந்துகள் விழுவதில்லை. தொடர்ந்து வேகம் மற்றும் கட்டுப்பாடு, துல்லியம் என பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமத்தை உண்டாக்குகிறார். இப்படியான அரிய திறமையை கொண்டிருப்பதால் கூடிய விரைவில் இவரை இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசி இருக்கும் மயங்க் யாதவ் “நான் சிறுவயது முதல் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். என் தந்தைக்கு வேகப்பந்துவீச்சாளர்களை மிகவும் பிடிக்கும். அதனால் அவர் எனக்கு தொலைக்காட்சியில் ஸ்டெயின், மோர்னே மோர்கல், மிட்சல் ஜான்சன் ஆகியோரைக் காட்டுவார். இது எனக்கு பந்து வீச பயன்பட்டது. பேட்ஸ்மேன் ஹெல்மெட் அல்லது உடம்பில் பந்து படிப்பதை நான் எப்பொழுதும் விரும்பக் கூடியவன். இப்படியான விஷயங்கள்தான் என்னை வேகப்பந்துவீச்சாளராக தூண்டியது.

வேகம் எனக்கு இயல்பாகவே இருக்கிறது. நான் எப்பொழுதும் வேகமாக வீச வேண்டும் என்று முயற்சி செய்தது இல்லை. நான் வழக்கமாக நிலைத்தன்மையுடன் பந்து வீசுவதில்தான் கவனம் செலுத்துவேன். முடிந்தவரை பந்துவீச்சில் நிலையாக இருக்கவும் அணியை வெற்றி பெற வைக்கவும் முயற்சி செய்தேன். வேகம் தனிப்பட்ட முறையில் எனக்கு இருப்பது ஒரு பிளஸ் பாயிண்ட்தான்.

- Advertisement -

இதையும் படிங்க: பிரித்வி ஷா உள்ளூர் கிரிக்கெட்டரா?.. நியாயமே கிடையாது.. ரிக்கி பாண்டிங் பதிலால் ரசிகர்கள் கோபம்

மைதானத்திற்குள் வந்தவுடன் இது எனது சொந்த இடம் போல் இருந்தது. ஆரம்பத்தில் பதட்டம் இருக்கும் என்று எல்லோரும் பொதுவாக சொல்வார்கள். நான் அப்படி எதையும் உணரவில்லை. கேப்டன் பூரன் எனக்கு முதல் ஓவரை தந்த பொழுது, எனக்குள் உள்ளிருக்கும் குரல், இது உனக்கான வாய்ப்பு நீ இதை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது” என்று தெரிவித்திருக்கிறார்.