“பேப்பர்ல இருக்குறது முக்கியம் இல்ல”.. முகமது கைப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த டேவிட் வார்னர்!

0
4168
Warner

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் உலகக் கோப்பை தொடரை ஒட்டிய சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

யாரெல்லாம் சர்ச்சைகளை உருவாக்கினார்களோ, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் வந்து தங்களுடைய பதிலடியை கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பந்து தரப்படுகிறது, கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் விஷயத்தில் ஏதோ ஏமாற்றுகிறார், ஐசிசியை கைக்குள் வைத்து பிசிசிஐ சரி செய்கிறது என்றெல்லாம் பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்த நிலையில் இன்று முகமது சமி பாகிஸ்தான் தரப்பிலிருந்து வந்த அர்த்தமற்ற சர்ச்சையான பேச்சுகளுக்கு எல்லாம் தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்திருந்தார். பாகிஸ்தானின் சில முன்னாள் வீரர்களால் தங்கள் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என்றார். மேலும் முன்னாள் வீரர்கள் இப்படி பேசினால் உலகம் சிரிக்கும் என்றும் காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வியை ஏற்க முடியாத இந்திய முன்னாள் வீரர்கள் சிலர், மிகச் சிறந்த அணி கோப்பையை இழந்துவிட்டது அதைவிட சுமாரான அணி கோப்பையை வென்றுவிட்டது என்பதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இப்படியான கருத்துக்களை கம்பீர் மறுத்து, சிறந்த அணிதான் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது, இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்கின்ற யதார்த்தத்தை விட்டு நாம் ஓடக்கூடாது, நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேப்பரில் சிறந்த இந்திய அணி கோப்பையை இழந்ததை ஏற்க முடியவில்லை என்பதாக ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதை ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அந்த குறிப்பிட்ட முகமது கைஃப் பேச்சு சம்பந்தப்பட்ட ட்விட்டுக்கு டேவிட் வார்னர் தன்னுடைய பதிலடியை நயமான முறையில் முன் வைத்திருக்கிறார். டேவிட் வார்னரும் முகமது கைப்பும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முகமது கைப்புக்கு பதில் கூறிய டேவிட் வார்னர் “எனக்கு முகமது கைபை பிடிக்கும். பேப்பரில் என்ன மாதிரியான வீரர்கள் இருக்கிறார்கள் என்பது பிரச்சனை கிடையாது. அன்றைய குறிப்பிட்ட நாளில் நாம் என்ன மாதிரி செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். இதனால்தான் அதை இறுதிப்போட்டி என்கிறார்கள். அன்றைய நாளில் எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லலாம்!” என்று கூறியிருக்கிறார்!