லிவிங்ஸ்டன் மிரட்டலடி வீண்; முக்கியமான போட்டியில் கோட்டைவிட்ட பஞ்சாப்… போராடி வென்றது டெல்லி!

0
824

லிவிங்ஸ்டன், அதர்வா இருவரும் சிறப்பாக போராடியும் கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாததால், 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணிஇடம் வீழ்ந்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் அந்த வாய்ப்பு இருப்பதால், இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இந்த சீசனின் முதல் அரைசதத்தை அடித்த பிரித்வி ஷா 54 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 46 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து உள்ளே வந்த ரயிலி ருஸோ 37 பந்துகளில் 82 விளாசினார். பில் சால்ட் 14 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 213 ரன்கள் குவித்தது.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் 214 ரன்கள் என்னும் இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பிரப்சிம்ரன் 22 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன் மற்றும் அதர்வா இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கொருக்கு எடுத்துச் சென்றனர். இந்த ஜோடி 78 ரன்கள் சேர்த்தது. கடைசி ஐந்து ஓவர்கள் மீதமிருக்க அதர்வா ரிட்டயர்டு ஹர்ட் முறைப்படி 55 ரன்கள் அடித்து வெளியேறினார்.

உள்ளே வந்த ஜித்தேஷ் சர்மா 3 பந்துகளில் டக் அவுட் ஆனதால், பஞ்சாப் அணியின் திட்டம் சறுக்கியது. ஷாருக் கான் 6 ரன்கள், சாம் கர்ரன் 11 ரன்கள், ஹர்ப்ரீத் ப்ரார் டக் அவுட் ஆக, பஞ்சாப் அணி மிகப்பெரிய தடுமாற்றத்தை கண்டது.

கடைசி மூன்று ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு கிட்டத்தட்ட 60 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசிய 18ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 21 ரன்கள் அடித்தனர்.

அதற்கு அடுத்த ஓவரை நார்க்கியா வீசினார். இதில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்ததோடு 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை டெல்லி அணி பக்கம் கொடுத்தது.

கடைசி ஓவரில் 33 ரன்கள் அடிக்க வேண்டிய தேவை இருந்தது. லிவிங்ஸ்டன் 17 ரன்கள் மட்டுமே அடித்துக் கொடுக்க, 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் இருந்த பஞ்சாப் அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியை இழந்ததால், இனி கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாப் அணி கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன்ரேட் -0.308 ஆக இருக்கிறது. இதுவும் அவர்களுக்கு பின்னடைவை தந்திருக்கிறது