“விடிய விடிய உட்கார்ந்து விமர்சிக்கலாம்.. இதெல்லாம் டீமா?” – வக்கார் யூனுஸ் பாபர் அசாம் அணி மீது கடுமையான கோபம்!

0
1588
Waqar

வெள்ளைப் பந்தில் இரண்டு கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஏழு போட்டிகளில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஆச்சரியத்தை கொடுத்தது.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அணி எந்த ஒரு இடத்திலும் அழுத்தத்தை உணரவில்லை. அவர்கள் வெகு இயல்பாக விளையாடி எட்டு விக்கெட் வித்தியாசம் என்கிற பிரம்மாண்டமான வெற்றியை பெற்றார்கள்.

இதே போல் கடந்த வாரத்தில் டெல்லியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வென்ற பொழுதும் இதே மாதிரி ஆட்டத்தை தங்கள் கைகளுக்குள் முழுமையாக வைத்து, இங்கிலாந்து அணி மீது ஒட்டுமொத்த அழுத்தத்தையும் திருப்பி வென்றார்கள்.

பாகிஸ்தான் அணி தோற்றது மட்டும் இல்லாமல் படுதோல்வியை சந்தித்து இருக்கின்ற காரணத்தினாலும், நேற்று அவர்கள் பீல்டிங் செய்த விதத்தாலும், பாகிஸ்தான் ரசிகர்களும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் வெறுப்படைந்து இருக்கிறார்கள். இதனால் விமர்சனங்கள் மிகக் கடுமையாக வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கூறும் பொழுது “இது மிகவும் வேதனை அளிக்கிறது. ஆனால் நான் ஆப்கானிஸ்தான் வெற்றிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ஆப்கானிஸ்தான் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என்பதை மறக்கக்கூடாது. அவர்கள் அழுத்தத்தை கையாண்ட விதம், அவர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. நான் அவர்களுடைய கிரிக்கெட்டுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இது பாகிஸ்தான் அணியே கிடையாது. உங்களுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். அவர்களிடம் களத்தில் எந்தவித போராட்ட குணாதிசயத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் குறித்து வரிசைப்படுத்த நிறைய இருக்கிறது. இவர்களை விடிய விடிய உட்கார்ந்து விமர்சிக்கலாம். அவ்வளவு விஷயங்களை அவர்கள் கொடுத்து இருக்கிறார்கள்!” என்று மிக வெறுப்பாக பேசியிருக்கிறார்!