“அடிச்சு சொல்றேன்.. ரச்சின் ரவீந்திராவ தோனி வாங்க விரும்ப மாட்டார்.. காரணம் இதுதான்!” – மஞ்ச்ரேக்கர் சுவாரசிய தகவல்!

0
2124
Dhoni

நாளை மறுநாள் 17வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த முறை ஏலம் துபாயில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஐபிஎல் தொடரில் மினி ஏலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மெகா ஏலத்தில் பொதுவான ஒரு அணியை உருவாக்குவார்கள். உருவாக்கிய அந்த அணியில் உள்ள குறைகளை மினி ஏலத்தின் மூலம் சரி செய்து கொள்வார்கள்.

- Advertisement -

எனவே ஒரு அணியை முழுமையாக்க முக்கியமான தேவையாக மினி ஏலம் ஐபிஎல் தொடரில் இருந்துவருகிறது. மினி ஏலத்தை பொறுத்தவரை பணத்தைவிட தேவைப்படும் வீரர்தான் முக்கியம். எனவே அணிகள் பணத்தில் கணக்கு பார்க்காமல் தங்களுக்கு தேவையான ஒன்று இரண்டு வீரர்களுக்கு பெரிய தொகை கொடுப்பார்கள்.

இந்த வகையில் நடக்க இருக்கும் மினி ஏலத்தில் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ட்ராவீஸ் ஹெட், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்டு கோட்சி, இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதில் ரச்சின் ரவீந்தரா இந்த ஆண்டு சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் 64 சராசரியில் 578 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். துவக்க வீரராக இந்திய சூழ்நிலையில் அவரால் நன்றாக செயல்பட முடிந்தது. மேலும் அவர் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் மற்றும் இளம் வயது உடையவர். எனவே அவரை ஒரு நீண்ட கால முதலீட்டுக்காக எந்த அணியாவது பெரிய தொகைக்கு வாங்க விரும்பும்.

- Advertisement -

ஆனாலும் இந்த வகையில் சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி சச்சின் ரவீந்திரவை பெரிதாக விரும்ப மாட்டார் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஏலம் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து, குறைந்த தொகைக்கு கிடைத்தால் மட்டுமே ரச்சின் ரவீந்தராவை ஒரு ரிசர்வ் பேட்டராக மட்டுமே வாங்க தோனி விரும்புவார். எந்த காரணத்திற்காகவும் அவர் தன்னுடைய துவக்க ஆட்டக்காரர்களை மாற்ற மாட்டார். ஏனென்றால் 80 சதவீத ரன்கள் அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது.

ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் ரச்சின் ரவீந்தராவுக்கு மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். அவருக்கு முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். சென்னை அணியில் இது முடியாது. மேலும் அவர்களுக்கு மிடில் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய வேறு வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்த காரணத்தால் மகேந்திர சிங் தோனி இவரை விரும்ப மாட்டார்.

ஆர்சிபி அணி அவர்களது கேப்டன் பிளிஸிசை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைக்க நினைத்தால், விராட் கோலி மற்றும் ரச்சின் ரவீந்திரா துவக்க இடத்திற்கு மிகச் சரியாக இருப்பார்கள். இது அவர்களால் செய்ய முடிந்த ஒன்றுதான்!” என்று கூறியிருக்கிறார்!