“இந்தியா ஸ்பின் பிட்ச் போடட்டும்.. 2 சின்ன பசங்கள வச்சு கதையை முடிக்கிறோம்” – இங்கிலாந்து ஸ்வான் பேச்சு!

0
108
Swann

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்தத் தொடர் மார்ச் வரையில் நீள்கிறது. இதற்கு அடுத்து ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் ஆரம்பிக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி இன்னொரு முறை தகுதி பெறுவதற்கு இந்த தொடரில் வெற்றி மிக முக்கியமானது. அதே சமயத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இருப்பதற்கு இந்தத் தொடரை வெல்வது இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

கடந்த முறை இங்கிலாந்து இங்கு வந்த பொழுது முதல் டெஸ்டில் அபாரமான முறையில் சென்னையில் வைத்து வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விக்கெட்டை தியாகம் செய்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி அபாரமாக தொடரை கைப்பற்றியது.

குறிப்பிட்ட அந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்க, இன்னொரு பக்கத்தில் அக்சர் படேலை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியாமல் இங்கிலாந்து பேட்டிங் யூனிட் சீர்குலைந்து போனது. இதுதான் அந்தத் தொடரில் மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டு வந்தது.

தற்போது இந்தியாவிற்கு வரவிருக்கும் இங்கிலாந்து அணியின் சுழற் பந்து வீச்சு கூட்டணியாக அனுபவம் வாய்ந்த ஜாக் லீச் உடன் அனுபவமற்ற ரேகான் அகமத், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் போன்ற இளைஞர்கள் வருகிறார்கள். இவர்களுக்கு பெரிய அளவில் உள்நாட்டு கிரிக்கெட் அனுபவமும் கிடையாது. ஆனால் இவர்களை வைத்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவை சாய்க்க முடியும் என, இங்கிலாந்து முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் கிரேம் ஸ்வான் நினைக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இவர்கள் இதே வழியில் பந்துவீசி, இந்தியாவிற்கு சென்று, விளையாடும் வாய்ப்பை பெற்று, சூழ்நிலை இவர்களுக்கு ஒத்து வருமானால், அது மிகவும் உற்சாகமூட்டக்கூடிய ஒன்றாக அமையும். அவர்களால் எந்த அழுத்தத்தையும் சமாளிக்க முடியும். இந்தியா வழக்கம்போல் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தால் டாம் ஹார்ட்லி, சோயப் பசீர் மிகுந்த உற்சாகமடைவார்கள்.

இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்டில் இவர்களுடைய பந்துவீச்சை நான் பார்த்தேன். கடந்த முறை அகமதாபாத்தில் கிடைத்த ஆடுகளம் போல் இருந்தால், இவர்கள் இருவரும் உலகில் எந்த பேட்டிங் வரிசையையும் எளிதாகச் சுருட்டுவார்கள்.

முன்பு இங்கிலாந்து அணியில் ஸ்பின்னர்களாக வருவதற்கு முன் அனுபவம் நிறைய தேவைப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலீஷ் கிரிக்கெட்டில் அப்படி இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது” என்று கூறியிருக்கிறார்!