முன்னாள் மும்பை வீரர் மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அதிரடி துவக்க ஆட்டக்காரர் லென்டில் சிம்மன்ஸ் ஓய்வு !

0
106
Lendl Simmons

வெஸ்ட் இன்டீஸ் அணி வீரரான லென்டில் சிம்மன்ஸ் நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தற்போது இவருக்கு 37 வயதாகிறது. நேற்று ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது!

லென்டில் சிம்மன்ஸின் முழும்பெயர் லென்டில் மார்க் பிளாட்டர் சிம்மன்ஸ் ஆகும். இவர் 1985ஆம் வருடம் டிரினாட் டொபாக்கோ, போர்ட் ஆப் ஸ்பெய்னில் பிறந்தவர். உலகம் தழுவி பல நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பல அணிகளுக்காக இவர் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

இவர் வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் கடைசியாக 2015 மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தார். டி20 கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம் ஆனார். கடைசியாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் செளத் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி இருந்தார். வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ள இவர், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் விளையாடினார்.

வெஸ்ட் இன்டீஸ் அணிக்காக 68 ஒருநாள் போட்டிகளில் 65 இன்னிங்ஸ்களில் 1958 ரன்களை எடுத்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும், 16 அரைசதங்களும் உண்டு. 68 டி20 போட்டிகளில் 67 இன்னிங்ஸ்களில் 1527 ரன்களையும், அதில் 9 அரைசதங்களையும் அடித்திருக்கிறார். 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெற்ற இவர் 16 இன்னிங்ஸ்களில் எடுத்தது வெறும் 278 ரன்கள்தான். அதிபட்ச ஸ்கோரோ 49ரன்தான்!

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக இவர் நான்கு சீசன்களில் 2014 முதல் 2017 வரை விளையாடி இருக்கிறார். இதில் இவர் 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். மொத்தம் 29 போட்டிகளில் 1079 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், 11 அரைசதங்கள் அடக்கம். அதிகபட்ச ஸ்கோர் 100 நாட் அவுட். 2018ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இவர் விலைபோகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணியோடு இறுதிபோட்டியில் மோதி, பென் ஸ்டோக்ஸின் கடைசி ஓவரில் பிராத்வெய்ட் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் பறக்கவிட, வெஸ்ட் இன்டீஸ் அணி அந்த டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றி இருந்தது. அந்தத் தொடரில், வெற்றிபெற்ற வெஸ்ட் அணியில், ஆடும் அணியில் லென்டில் சிம்மன்ஸ் இடம்பெற்று இருந்தார். ஒரு உலகக்கோப்பை வென்ற அணியில் ப்ளேயிங் லெவனில் இருந்த வீரர் என்ற சிறப்போடு விடைபெறுகிறார்!