இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பத்தில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சிறந்த வீரராக இருப்பார் என குமார் சங்கக்கரா கூறியிருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வில் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வாவது உறுதியான ஒன்றாக மாறியிருந்தது. இப்படியான நிலையில் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு கேஎல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் இடையே பெரிய போட்டி நிலவியது.
இதற்கு ஏற்றார் போல் அணி அறிவிப்பிற்கு முந்தைய போட்டியில் இரு அணிகளும் மோதிக்கொண்டது. அந்த போட்டியில் முதலில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் அரை சதம் அடித்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அபாரமாக விளையாடி அரை சதம் அடித்து போட்டியையும் இறுதிவரை நின்று சஞ்சு சாம்சன் வெல்ல வைத்தார்.
இதற்குப் பிறகு சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வாவது எளிதான ஒன்றாக மாறியது. வழக்கமாக எந்த வடிவத்தில் உலகக் கோப்பை இருக்கிறதோ அதற்கு எதிர் வடிவத்தில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வரும். இந்த முறை முதல் முறையாக நேரடியாக உலகக் கோப்பை இந்திய அணிக்கு அவர் தேர்வாகி இருக்கிறார். மேலும் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் ஐந்து அரைசதங்கள் அடித்து இருக்கிறார். அவருடைய அணுகுமுறை முன்பை விட சிறப்பாக மாறி இருக்கிறது.
இதுகுறித்து குமார் சங்கக்கரா பேசும் பொழுது “சஞ்சு சாம்சன் ஒரு ஸ்பெஷல் பிளேயர். அவர் புத்துணர்ச்சியோடு, முழு கவனத்துடன் இருக்கும் பொழுது அவரால் செய்ய முடியாதது எதுவுமே கிடையாது. அவர் அமைதியான அடக்கமான ஒரு பையன். அவர் பெரிதாக சமூக ஊடகங்களிலும் கிடையாது. அவர் தற்போதைய டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் சிறந்த ஒரு வீரராக இருப்பார்.
இதையும் படிங்க : ஆஸி பிளேயர்ஸ் எப்படினு 2003லயே தெரியும்.. அவங்க கையில பவுலர் அடி வாங்கினா அவ்வளவுதான் – முகமது கைஃப் பேட்டி
இந்த ஐபிஎல் சீசனில் அவரிடம் இருக்கும் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அவருக்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு இருக்கிறது. ஆட்டத்தில் சில நிலைகள் இருக்கிறது. சில இடங்களில் அவர் கவனக் குறைவாக இருப்பது போல் இருந்தது. நாங்கள் கடந்த சீசன்களில் இது குறித்து அவரிடம் உரையாடி இருந்தோம். எல்லா நேரத்திலும் பயிற்சி செய்து உடல் மற்றும் மனரீதியாக சோர்வாக இருப்பதை விட, ஓய்வாகவும், மீண்டு வருவதிலும் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார். இந்த மாற்றத்தாலும் அவருடைய தனிப்பட்ட திறமையாலும் அவர் சிறந்த வீரராக வருவார்” என்று கூறியிருக்கிறார்.