“பேட்டிங்கில கோலினா.. பவுலிங்ல சமிதான்.. 2 பேரும் இந்த வேலையை சரியா செய்றாங்க!” – ராபின் உத்தப்பா அசத்தலான பேச்சு!

0
392
Shami

இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய வேத பந்துவீச்சு துறை மிகவும் கூர்மையாக இருந்து வருகிறது.

இவர்கள் ஆடுதளங்கள் எப்படி இருந்தாலும் தங்களுடைய அசாத்திய பந்துவீச்சு திறமையின் மூலமாக விக்கெட்டை கொண்டு வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பும்ரா, சிராஜ், சமி 3 பேரும் ஒன்று சேர்ந்த பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பலம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒருவர் போனால் ஒருவர் என தொடர்ச்சியாக கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சில் தாக்கிக் கொண்டே இருக்க முடிகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் முகமது சமி கடைசி மூன்று போட்டிகளாகத்தான் விளையாடி வருகிறார்.அவருக்கு முதல் நான்கு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மூன்று போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட், இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட், நேற்று இலங்கைக்கு எதிராக 5 விக்கெட் என 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இவருடைய அசாத்திய பந்துவீச்சு திறமை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய வசதியை கொடுக்கிறது. அவர்கள் எப்படி ஆடினாலும் பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஆட்டத்தை காப்பாற்றி விடுகிறார்கள்.

முகமது சமி குறித்து பேசி உள்ள உத்தப்பா கூறும் பொழுது “அவர் இன்னும் விளையாடிக் கொண்டிருப்பதால் அவரை ஜாம்பவானாக யாரும் கருதவில்லை. சமி போன்ற ஒருவருக்கு சாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. அவரது ஆளுமை பலகாலமாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்த ஜாகீர் பாய் மற்றும் ஸ்ரீநாத் சாரை போல இருக்கிறது. நீங்கள் அவரை அப்படியான பந்துவீச்சாளர் என்றுதான் நினைக்க வேண்டும்.

அதே அணுகுமுறை, அதே பசி, அதே மனக்கசப்பு என்று அவருக்கு எல்லாமே அப்படியே இருக்கிறது. விராட் கோலிக்கு பேட்டிங்கில் என்ன திறமை இருக்கிறதோ அதே அளவு திறமை முகமது சமிக்கு பந்துவீச்சில் இருக்கிறது. இருவருமே தங்களுடைய செயல்முறைகளில் மிகவும் சுத்தமாக இருக்கிறார்கள். அடிப்படை விஷயத்தை சலிப்பில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சமியை எடுத்துக் கொண்டால் அவர் தொடர்ச்சியாக சரியான இடங்களில் சலிப்பே இல்லாமல் பந்தை வீசிக் கொண்டே இருக்கிறார். விராட் கோலி இப்படித்தான் அடிப்படை விஷயங்களில் தொடர்ச்சியாக வேலை செய்வார். நேற்று முதல் 10 ஓவர்களில் அவர் அடிப்படை விஷயங்களில் சரியாக இருந்துதான் பின்பு அடுத்த கட்டத்தில் ரன்கள் கொண்டு வந்தார்.

சமி தன்னை எப்பொழுதும் சரியாக வைத்துக் கொண்டு சரியான இடங்களில் தொடர்ந்து பந்து வீசுகிறார். அவரிடமிருந்து எப்பொழுதாவதுதான் தவறான பந்து வருகிறது. விராட் கோலி செயல்முறையுடன் அவர் செயல்முறை ஒத்துப்போகிறது!” என்று கூறி இருக்கிறார்!