ரோஹித் ஷர்மாவின் 8 ஆண்டுகால தொடர் சாதனைக்கு முற்றுப் புள்ளி வைத்த கே.எல்.ராகுல்

0
3400
Rohit Sharma and KL Rahul

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. வரும் 26ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க நாட்டிலேயே தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தும் வாய்ப்பு இந்திய அணிக்கு அமைந்திருக்கிறது. கேப்டன் கோலி தலைமையில் விளையாடும் இந்திய அணிக்கு புதிய துணை கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால் வழக்கமான துவக்க வீரர் ரோஹித் காயம் காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து விலகியது தான்.

இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவர் ரோகித். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் மிடில் ஆர்டர் வீரராக விளையாடி வந்த இவர் அப்போதைய கேப்டன் தோனி கூறியதால் துவக்க வீரராக மாறினார். அதன் பின்பு வேறு எந்த துவக்க வீரரும் செய்யாத சாதனைகளை எல்லாம் வரிசையாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ரோஹித். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான். மேலும் துவக்க வீரர் ஆனதற்கு பிறகு இவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக மாறியுள்ளது. அரை சதம் அடிக்கும் வரை மிகவும் அமைதியாகவும் அதன்பிறகு அதிரடியின் உச்சத்திற்கு சென்று விளையாடுவதும் இவரது வழக்கமாகும். இதன் காரணமாக பல பெரிய பந்து வீச்சாளர்கள் கூட ரோகித்திற்கு கடைசி ஓவர்களில் பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

- Advertisement -

இது போன்ற அதிரடி பேட்டிங் உதவியுடன் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு சாதனையை தன்வசம் வைத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டிலும் இந்திய அணி சார்பாக ஒரே ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ரோகித் உடையதாகத்தான் இருக்கும். கடந்த 2013ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2020 வரை இதுதான் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இதில் மூன்று முறை இரட்டை சதங்களும் நான்கு முறை 150 ரன்களுக்கு மேலேயும் இவர் அடித்துள்ளார். ஆனால் இந்த முறை வெறும் மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடியதால் ரோகித்தால் இந்த சாதனையை மீண்டும் நிகழ்த்த முடியவில்லை. அவருக்கு பதிலாக சக துவக்க வீரரான கே எல் ராகுல் இந்த முறை அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் எடுத்த 108 ரன்கள் தான் இந்த சாதனையை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. தற்போது ஒரு நாள் போட்டிகளுக்கும் ரோகித் கேப்டன் ஆகியுள்ளதால் அடுத்த ஆண்டு மீண்டும் இந்த சாதனையை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.