கவஜா அபார சதம், இருவர் அரைசதம்.. அசுரவேக இங்கிலாந்திற்கு நிதானமாக பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா! – ஏன்டா டிக்ளேர் செய்தோம் என நினைக்கும் இங்கிலாந்து!

0
734

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கவாஜா சதம் மற்றும் டிராவிஸ் ஹெட், கேரி இருவரும் அரைசதம் அடிக்க, ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவதற்குள்ளேயே 78 ஓவர்களில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது.

- Advertisement -

அபாரமாக விளையாடி வந்த ஜோ ரூட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் அடித்திருந்தார். பேர்ஸ்டோவ் 78 ரன்கள், ஜாக் க்ராலி 61 ரன்கள் அடித்திருந்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் கடைசி சில ஓவர்களில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் அடித்திருந்தது.

கவாஜா மற்றும் வார்னர் இருவரும் இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கினர். வார்னர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்த பந்து லபுஜானே வந்த முதல் பந்தே ஆட்டமிருந்து வெளியேற, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பிராட் கைப்பற்றி இங்கிலாந்து அணியை முன்னிலைப்படுத்தினர்.

ஸ்டீவ் ஸ்மித் 16 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து சற்று தடுமாற்றம் கண்டபோது, நான்காவது விக்கெட்டிற்கு கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் சரியாக 50 ரன்கள் அடித்து ஆனார்.

- Advertisement -

களத்தில் இருந்த கவாஜா அரைசதம் கடந்தார். அடுத்து வந்த கேமரூன் கிரீன், கவாஜா உடன் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க, ஐந்தாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. கேமரூன் கிரீன் 36 ரன்களுக்கு மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.

மெல்லமெல்ல வரிசையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து அணி விரைவாக ஆல் அவுட் செய்து இரண்டாவது இன்னிங்சை தொடரும் என எதிர்பார்த்து இருந்தபோது, ஆறாவது விக்கெட்டிற்கு அலெக்ஸ் கேரி மற்றும் கவாஜா இருவரும் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தின் கனவை தகர்த்தனர்.

இரண்டாம் நாள் முடியும் வரை இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. இரண்டாம் நாள் முடியும் தருவாயில் அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்தார். கவாஜா சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியை நல்ல நிலைக்கு எடுத்து சென்றார்.

இங்கிலாந்து அணி புதிய பந்தை எடுத்த பிறகு, கவாஜாவின் விக்கெட்டை பிராட் எடுத்தார். ஆனால் அந்த பந்து நோபால் ஆனது. இது இங்கிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவை தந்தது. அதன் பிறகு சுதாகரித்துக் கொண்ட கவாஜா நாள் முடியும் வரை அவுட் ஆகவில்லை.

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. 82 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இருக்கிறது. இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்த கவாஜா 126 ரன்கள் மற்றும் அலெக்ஸ் கேரி 52 ரன்கள் அடித்திருந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக, மொயின் அலி மற்றும் பிராட் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.