இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி தங்களது பாஸ்பால் அணுகுமுறையால் தொடரை மிகவும் சுவாரசியப்படுத்தி இருக்கிறது.
அதே சமயத்தில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஷ்வால் பேட்டிங்கில் இந்திய அணிக்கு இந்த தொடருக்கு மட்டும் அல்லாது எதிர்காலத்திற்கும் மிகச் சிறந்த நம்பிக்கையை கொடுத்து வருகிறார். திறமை மட்டும் இல்லாமல் அவருக்கு விளையாட்டு சார்ந்த புத்திசாலித்தனம் நிறைய இருக்கிறது.
அடுத்து சுழல் பந்துவீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கக் கூடிய வகையில் இருக்கும் ஆடுகளத்தில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா இதுவரை 16 விக்கெட்டுகள் கைப்பற்றி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரே ஆட்டநாயகன் விருது வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் பும்ரா இந்த தொடரை இந்திய தரப்பில் மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்று, கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் மகிழ்ச்சி படுத்தி வருகிறார்கள். தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் எப்படி நகரும் என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், இந்தியாவின் ஜாகீர் கான், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற பெரிய வீரர்கள், தங்களது அனுபவம் மற்றும் வேடிக்கையான பேச்சுக்கள் மூலமாக நிறைய கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது டிஆர்எஸ் முறை இல்லாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மகேந்திர சிங் தோனி தனது பந்துவீச்சில் கெவின் பீட்டர்சனை வீழ்த்தி இருப்பார் என்று ஜாகீர் கான் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இதற்கு திருப்பி பதில் அளித்த கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது ” உங்களுக்கு ஒன்னு தெரியுமா மிகச்சிறந்த மகேந்திர சிங் தோனி என் பாக்கெட்டில்தான் இருக்கிறார். நான் கம்ரன் அக்மல் விக்கெட்டை வீழ்த்தியதற்கு அடுத்து, மகேந்திர சிங் தோனியின் விக்கெட்டைதான் வீழ்த்தி இருக்கிறேன்” என்று நகைச்சுவையாக கூறினார்.
இதற்கு மீண்டும் பதில் கூறிய ஜாகீர் ஜாகீர் கான் கூறும் பொழுது ” நான் தற்போது யுவராஜ் சிங்கை சந்தித்தேன். அவர் பாக்கெட்டில்தான் நீங்கள் இருப்பதாக கூறினார்” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
இதையும் படிங்க : “ஸ்டோக்ஸ் கீழே விளையாடி ஹீரோவா காட்டிக்கறார்.. முடிஞ்சா மேல வந்து விளையாடுங்க” – ஆகாஷ் சோப்ரா கருத்து
இதைக் கேட்ட கெவின் பீட்டர்சன் சிரித்தபடியே ” தெரியும் தெரியும் நீங்கள் இதைத்தான் சொல்லப் போகிறீர்கள் என்று நன்றாகவே தெரியும் என்று கூறினார். ஏனென்றால் தனது இடதுகை சுழல்பந்துவீச்சு மூலம் கெவின் பீட்டர்சனை நிறைய முறை யுவராஜ் சிங் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.