மேக்ஸ்வெல்லுக்கு ரன்னர் வழங்காத ஐசிசியின் மனிதாபிமானமற்ற விதி எப்படி.? – கேன் வில்லியம்சன் ஆச்சரியமான பதில்.!

0
23309

நேற்று மும்பையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் 39 வது போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலியா அணியை மேக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் இருவரும் வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து 202 ரன்கள் எடுத்திருந்தாலும் அதில் பெரும்பாலான ரன்கள் மேக்ஸ்வெல் பேட்டில் இருந்து வந்தது. நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இவரது ஆட்டம் கிரிக்கெட் உலகையே புரட்டி போட்டு இருக்கிறது.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் முதல் வாசிம் அக்ரம் வரை அனைவரும் மேக்ஸ்வெல் பேட்டிங்கை ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆட்டம் இதுதான் என வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தசை பிடிப்புகளால் மேக்ஸ்வெல் மிகவும் சிரமத்துடன் விளையாடினார். அவரால் ஓடி ரன் எடுக்க முடியாத நிலையிலும் சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளாக விளாசி தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு பேட்ஸ்மேன் ஓடி ரன் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அவருக்கு பதிலாக ஓடுவதற்கு ரன்னர் ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வி பல கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்திருக்கிறது. எனினும் சில காலங்களுக்கு முன்பு ரன்னர் வழங்கும் விதியை ஐசிசி தடை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு சரியான அணுகுமுறை அல்ல என்றும் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

நாளை இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான லீக் போட்டி பெங்களூரில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு அந்த அணி இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். மறுபுறம் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கலந்து கொள்வதற்கு இலங்கை அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நிருபர் ஒருவர் ” ஸ்பிரிட் ஆப் தி கேம் விதிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.? இலங்கை வீரர் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார். நேற்று மேக்ஸ்வெல் தசைப்பிடிப்புகளால் அவதிப்பட்ட போதும் அவருக்கு ரன்னர் வழங்கப்படவில்லை. ஐசிசி யின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற விதிகளை பற்றி உங்கள் கருத்து என்ன.?

“இது போன்ற விதிகள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.?என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய கேன் வில்லியம்சன் ” நான் இதனைப் பற்றி பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை. பெரிதாக கவலைப்பட வேண்டிய அளவிற்கு இது ஒரு விஷயமும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் ரன்னர் இல்லாமல் விளையாடி வருகிறோம். ரன்னர் இல்லாததால் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆட வேண்டி இருந்தது. அதனையும் அவர் சிறப்பாக செய்தார்” என்று பதிலளித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய வில்லியம்சன் ” இதைப் பற்றி பெரிதாக யோசிக்க எதுவும் இல்லை. எப்போதாவது ஒரு சில நேரங்களில் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் பொதுவாக எடுத்துப் பார்த்தால் தற்போதைய காலகட்டங்களில் ரன்னர் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. மேலும் அது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நானும் நினைக்கவில்லை” என பதிலளித்திருக்கிறார்.