இந்த வருடம் ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. இதில் பங்கு பெற இருக்கும் 20 அணிகளும் அதை நோக்கி தங்களை தயார்ப்படுத்துகின்றன.
இந்த நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன்பான டி20 சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி முடித்துவிட்டது. இதற்கு மேல் சர்வதேச டி20 கிரிக்கெட் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கிடையாது.
கடைசி தொடராக இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கைப்பற்றியது.
இந்தத் தொடரில் இரண்டு அரைசதங்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய சிவம் துபே தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இவருடைய செயல்பாடு தற்பொழுது டி20 உலக கோப்பை இந்திய அணிக்கான தேர்வுகளில் புதிய ஆனால் நல்ல தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆரம்ப காலக்கட்டங்களில் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்த பொழுது இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுபவம் இன்மையால் அந்த வாய்ப்பு உடனே பறிபோனது. இதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த இவரது கிரிக்கெட் வாழ்க்கை மாறி இருக்கிறது.
இவரது உலகக் கோப்பை வாய்ப்பு குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ” சூரியகுமார் யாதவ் வேகப் பந்துவீச்சில் எல்லாவிதமான ஷார்ட் களையும் வைத்திருக்கிறார். அவர் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவரை கட்டுப்படுத்துவதற்காக எதிரணி ஒரு இடது கை சுழற் பந்துவீச்சாளரை கொண்டு வருகிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் எதிர் முனையில் சிவம் துபே இருந்தால் எப்படி இருக்கும். இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நல்ல உயரமாக, நல்ல ரீச் கொண்ட, பந்தை வலிமை கொண்டு அடிக்கக்கூடிய சிவம் துபே சிறந்த ஸ்பின் ஸ்ட்ரைக்கர். நிச்சயமாக அவர் அணியில் இருந்தால் அது சிறப்பானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.