“2023 ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுகிறாரா ஜஸ்ப்ரீத் பும்ரா? – என்.சி.ஏ வில் என்ன நடக்கிறது!

0
300

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் ஜஸ்ப்ரீத் பும்ரா. ஐபிஎல் போட்டி தொடர்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இவர் இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பக் காலத்தில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த பும்ரா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது முத்திரையை பதித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்தியா டெஸ்ட் போட்டிகளை வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர் . இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்தும் போர்படை தளபதியாக விளங்கியவர்.

- Advertisement -

கடந்த ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முதுகு வலி பிரச்சனை காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பும்ரா. அதன் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டி தொடர்களின் இறுதிப் போட்டியிலும் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. அந்தக் காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளிலும் பும்ரா பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு அந்த காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்த்தகுதியை மீட்டெடுக்க பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்களிலும் இவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டி தொடர்கள் துவங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு பும்ரா உடற்தகுதி பெறவில்லை எனக் கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது வரை என்சிஏ வில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பும்ரா.

இந்நிலையில் பும்ரா ஐபிஎல் தொடர்களிலும் பங்கேற்க மாட்டார் என என்சிஏ வில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால் அந்த டெஸ்ட் போட்டியிலும் பும்ரா பங்கேற்க முடியாது என தெரிகிறது.

- Advertisement -

தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிக்கை படி பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி தொடர்களுக்கு உடல் பகுதி பெறவில்லை என அறிவித்திருக்கிறது . மேலும் அவர் ஐபிஎல் தொடர்களிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் அந்தப் போட்டிக்கும் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட மாட்டார் என என்சிஏ தெரிவித்திருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு உம்ராவின் உடல் தகுதியை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு வருவதாக என்சிஏ பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பும்ரா 120 போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.