இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டியில், இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த காரணத்தினால் தொடரையும் கைப்பற்றியது.
இன்று ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைக்க, இந்திய அணி பனிப்பொழிவு இரண்டாம் கட்டத்தில் இருக்கும் நிலையில், 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
போட்டி நடைபெற்ற வாய்ப்பு மைதானம் கொஞ்சம் பெரியது என்கின்ற காரணத்தினால், இந்த ஸ்கோரை வைத்து போராட ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் பனிப்பொழிவை தாண்டி வெல்வது கடினம்.
இதற்கேற்றபடியே ஆஸ்திரேலியா அணி மூன்று ஓவரில் 40 ரன்கள் குவித்தது. உடனடியாக கேப்டன் சூரியகுமார் யாதவ் ரவி பிஷ்னோயை கொண்டு வந்தார். அவர் முதல் பந்திலேயே ஜோஸ் பிலிப்பியை வெளியேற்றினார்.
இதற்கு அடுத்து வந்த அக்சர் படேல் உடனே அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டை வெளியேற்றினார். இங்கிருந்தே ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துவிட்டது.
மேற்கொண்டு பந்து வீசிய அக்சர் படேல் மேலும் இரண்டு விக்கட்டுகள் கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றியை எளிமையாக்கினார். மொத்தம் நான்கு ஓவர் பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றியதோடு, வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றிக்குப் பின் பேசிய அக்சர் படேல் கூறும்பொழுது “நான் வீட்டில் இருந்த பொழுது பந்து வீச்சில் நிறைய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அதுதான் இப்போது வெளிவந்திருக்கிறது. நான் என்னுடைய பலத்தில் இருக்க முயற்சி செய்தேன்.
நான் அடிபட்டாலும் பரவாயில்லை என்று தைரியமாக ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசினேன். காரணம் பனிப்பொழிவு இருக்கும் பொழுது இது ஒன்று மட்டும்தான் அதை முறியடிப்பதற்கான வழி. அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் பயந்து கொண்டு இருந்தால் சரிவராது.
நாம் விக்கெட் எடுக்கும் மனோபாவத்துடன் செயல்படும்பொழுது அது நல்ல பலன் அளிக்கும். டி20 கிரிக்கெட் பொருத்தவரை எப்படியும் பந்துவீச்சாளர்கள் தாக்கப்படுவார்கள். எனவே தைரியமாக இருக்க வேண்டும். மேலும் எனது பந்துவீச்சில் சில புதிய வேரியேஷன்களையும் சேர்க்க, நல்ல தைரியம் கிடைத்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!