நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. இதில் கடைசி ஓவரில் தோனி ஒரு சிங்கிள் ரன் ஓடாதது தற்பொழுது விவாதம் ஆகி வருகிறது.
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். இதன் காரணமாக இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது பிரச்சினையை உருவாக்கியது. பவர் பிளேவில் விக்கெட் இழக்காமல் 55 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, அதற்குப் பிறகு ஒரு பவுண்டரி அடிப்பதற்கு பல பந்துகள் எடுத்தது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டும் அதிரடி வீரர் சிவம் துபே தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.
இந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த ருதுராஜ் அர்ஸ்தீப் சிங் வீசிஏ 18 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வந்தார். 19ஆவது ஓவருக்கு பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பின்னர் ராகுல் சாஹரை கொண்டு வந்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
இதன் காரணமாக அர்ஸ்தீப் சிங் வீசிய கடைசி ஓவர் அடித்து விளையாட வேண்டிய கட்டாயம் தோனிக்கு இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த தோனியால் அடுத்தடுத்த பந்தை அடிக்க முடியவில்லை. அப்பொழுது அவர் ஒரு சிங்கிள் ரன் ஓடக்கூடிய அளவில் அடித்த பொழுது, உடன் விளையாடிய டேரில் மிட்சல் ரன்னுக்கு ஓடி வந்து விட்டார். ஆனால் தோனி ரன்னுக்கு வர மறுத்து அவரை திருப்பி அனுப்ப, அவர் திரும்பவும் ஓடி கிரீசுக்கு வந்தார்.
இதையும் படிங்க : விராட் கோலியை தாண்டி ருதுராஜிக்கு ஆரஞ்ச் தொப்பி.. தோனிக்கு முதல்முறையாக நடந்த சம்பவம்
அந்த கடைசி ஓவரில் டேரில் மிட்சல் இரண்டு ரன்கள் எடுப்பதற்கான தூரத்தை ஓடி இருந்த பொழுது, தோனி ஒரு ரன் கூட ஓடாமல் அதை மறுத்தது ஆச்சரியமானதாக இருந்தது. மேலும் அவர் டாப் பேட்ஸ்மேன் என்பதால், அவருக்கு ஸ்ட்ரைக்கை தோனி கொடுத்து இருக்கலாம் என்று தற்பொழுது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் தோனி அதே ஓவரில் ஒரு சிக்சரை அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்காத ஒரு நிகழ்வாக இது அமைந்திருக்கிறது.