“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சதமடித்த முதல் வீரர்”… இன்னைக்கு ஆடிட்டோம்; ஆனால் நாளைக்கு தான் என்னோட ஆட்டமே இருக்கு – டிராவிஸ் ஹெட் பேட்டி!

0
909

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சதம் அடித்த முதல்வீரர் டிராவிஸ் ஹெட் போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதை பின்வருமாறு காண்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஏழாம் தேதி நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா.

- Advertisement -

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், லபுஜானே மற்றும் கவாஜா ஆகியோர் விரைவாக ஆட்டம் இழந்தனர். 76 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இந்திய பவுலர்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு பதிலடி கொடுத்தனர். டிராவிஸ் ஒரு பக்கம் நின்று கொண்டு பவுண்டரிகளாக விளாசி விரைவாக ரன்குவிக்க, மற்றொரு பக்கம் விக்கெட் இழக்காமல் கட்டை போட்டு கடுப்பேற்றினார் ஸ்டீவ் ஸ்மித்.

டிராவிஸ் ஹெட் 106 பந்துகளில் சதம் விலாசி அசத்தினார். ஸ்டீவ் ஸ்மித் ஆமை போல விளையாடி அரைசதம் அடித்தார். இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தது.

- Advertisement -

முதல் நாள் முடிவில் 327 ரன்கள் குவித்து வெறும் மூன்று விக்கெடுகளை மட்டுமே இழந்திருந்தது ஆஸ்திரேலியா அணி. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஹெட் 146 ரன்கள், ஸ்மித் 95 ரன்கள் அடித்திருந்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சதம் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார் டிராவிஸ் ஹெட். போட்டி முடிந்த பிறகு அவர் பேசியதாவது:

“இன்று காலை டாஸ் இழந்தது சற்று வருத்தமாக இருந்தாலும், அதன் பிறகு நாங்கள் வெளிப்படுத்திய ஆட்டம் எங்களுக்கு நன்றாக முடிந்திருக்கிறது. அதிக பயிற்சிகள் மேற்கொண்டதன் பலனாக இன்றைய ஆட்டத்தை பார்க்கிறேன். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் இழந்த பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இன்று நான் ஆரம்பம் முதலே நல்ல நிலையில் இருந்தேன். எனக்கு ஆங்காங்கே நல்ல பந்துகளை வீசி சோதனை செய்தனர். அதை நன்றாக பேட்டிங்கில் அட்ஜஸ்ட் செய்து பந்துகளை எதிர்கொண்டது பலனை கொடுத்திருக்கிறது. எதிர்முனையில் ஸ்மித் போன்ற ஒருவர் பேட்டிங் செய்து நம்பிக்கை அளிக்கும்பொழுது மற்றொரு பக்கம் நாம் என்ன ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

அவருடன் சேர்ந்து நான் பாட்னர்ஷிப் அமைப்பதை எப்போதும் விரும்புவேன். ஒரு முனையில் அவருக்கு பவுலர்கள் பல திட்டங்கள் வைத்துக் கொண்டு விக்கெட்டுகளை எடுக்கும் முயற்சியில் இருப்பார்கள். மற்றொரு பக்கம் நமக்கு பெரிதளவில் பாதிப்புகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அவர் பார்த்துக்கொள்வார். நாம் அழுத்தமின்றி பந்துகளை எதிர்கொள்ளலாம்.

இன்றைய ஆட்டத்தில் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் பேட்டில் எட்ஜ் எடுத்து கேட்ச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. அப்போது கட்டுப்பாடோடு ஆடிவிட்டாலே போதும். அதன்பிறகு போகப்போக பேட்டிங் செய்வதற்கு நன்றாகவே இருந்தது. இன்று நன்றாக அமைந்துவிட்டது. நாளை காலை தான் இன்னும் முக்கியமான கட்டம் இருக்கின்றது. இப்போது வலுவான நிலையில் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. 2019 ஆம் ஆண்டு இங்கு விளையாடி இருக்கிறேன். அப்போது இருந்ததற்கும் இப்போது இருந்ததற்கும் மனநிலை நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதையும் உணர்கிறேன்.” என்றார்.