இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று கொண்டதற்குப் பிறகும் இன்னும் முழுமையான பயிற்சியாளர் குழு அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது தலைமை பயிற்சியாளர் கம்பீர் பயிற்சியாளர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் நாயர் பேட்டிங் பயிற்சியாளராகவும், இன்னொரு துணைப் பயிற்சியாளராக டோன் டஸ்கேட் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்திய அணிக்கு முன்பு இருந்த பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் தற்பொழுதும் தொடர்கிறார். இந்த நிலையில் தற்போது இலங்கை சென்று இருக்கும் இந்திய அணிக்கு இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சாய்ராஜ் பகதுலே சென்றிருக்கிறார்.
தற்போது கம்பீர் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தான் இணைந்து வேலை செய்த மோர்னே மோர்கலை கேட்டிருப்பதாக ஆரம்பத்தில் இருந்து கூறப்படுகிறது. அவர் தன்னுடைய தந்தையை கவனித்து வருவதால், உடனடியாக இந்திய அணியில் இணையவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக அவரே வருவார் என்றும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான செப்டம்பர் மாதத்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இணைவார் என்றும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இடைக்கால பயிற்சியாளராக இருக்கும் சாய்ராஜ் பகதுலே சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியில் தொடர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே கம்பீர் உடன் சேர்த்து ஐந்து பயிற்சியாளர்கள் இருக்கும் நிலையில், ஆறாவது பயிற்சியாளராக மோர்னே மோர்கல் வரலாம்.
இதையும் படிங்க : கம்பீர் இது ஐபிஎஸ் கிடையாது.. ரோகித் கோலி வராங்க.. போனை எடுங்க – வெளியான எச்சரிக்கை செய்தி
ராகுல் டிராவிட் பயிற்சியில் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாஹாம்ப்ரே மட்டுமே இருந்தார். தற்போது வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்து வீச்சு என இரண்டு பந்துவீச்சு பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ யோசிப்பதாக செய்திகள் கூறுகிறது. இங்கிலாந்து அணியில் முன்பு சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக தனியாக பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடலில் பிசிசிஐ செல்ல இருக்கிறது என்று தெரிகிறது!