இந்தியாவில் ரஞ்சி ட்ராபி தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முதல் தர கிரிக்கெட் தொடராகக் கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த தொடருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து வருவதாகப் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக ரஞ்சி ட்ராபி தொடர் பாதியிலேயே இடைநிறுத்தப்படுவது மற்றும் பிற தொடர்களுக்காக வீரர்கள் இதிலிருந்து விலக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் உள்நாட்டு கிரிக்கெட்டைப் பாதிப்பதாகக் கருதப்படுகிறது. பிசிசிஐ எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் மாநில அணிகளின் பலத்தையும் ரஞ்சி கோப்பையின் மதிப்பையும் வெகுவாகக் குறைக்கின்றன.
இந்தச் சூழலில் நாட்டின் முன்னணி ரெட் பால் தொடரான ரஞ்சி ட்ராபியைப் பிசிசிஐ நடத்தும் விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தனது காட்டமான கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரஞ்சி ட்ராபி தொடர்பாக சுனில் கவாஸ்கர் பேசும்போது “அடுத்த மாதம் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் தேவையற்ற நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்க உள்ளது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா ஏ அணியும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதனால் நாட்டின் முதன்மையான தேசியத் தொடரான ரஞ்சி ட்ராபியில் விளையாட முடியாமல் சுமார் 50 முதல் 60 வீரர்கள் தங்கள் மாநில அணிகளில் இருந்து விலகும் நிலை ஏற்படும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “உலகில் வேறு எந்த முக்கிய நாடும் தனது தேசியத் தொடரை இவ்வளவு அலட்சியமாக நடத்துவது இல்லை. இங்கிலாந்தோ அல்லது ஆஸ்திரேலியாவோ தங்களது உள்நாட்டு சீசனின் போது இதுபோல ஏ டூர்களை நடத்துவதையோ அல்லது தேவையில்லாத போட்டிகளில் பங்கேற்பதையோ நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்களின் உள்நாட்டு சீசன்கள் மிகவும் புனிதமானவை, ஆனால் ஐபிஎல் வந்ததில் இருந்தே ரஞ்சி ட்ராபி பின்னடைவைச் சந்தித்துள்ளது” என்று கூறி முடித்துள்ளார்.