“நாங்க இந்தியாவ ஜெயிக்க அது உதவுச்சு”.. உண்மையை வெளிப்படையாக பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம்!

0
369
Markram

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி கெபெர்ஹாவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
உடல் நலக்குறைவு காரணமாக ருத்ராஜ் போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்கவுட்டாகி வெளியேறினர். அடுத்து களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் சூரியகுமார் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. திலக் வர்மா தனது பங்குக்கு 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 9 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்தார்.

கேப்டன் சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். 19.3 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்த நிலையில் மழையால் ஆட்டம் பாதித்தது. பின்னர் இந்திய அணியின் பேட்டிங் நிறுத்தப்பட்டு, 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹென்ட்ரிக்ஸ் அபாரமாக விளையாடி 49 ரன்களைக் குவித்தார். கேப்டன் மார்கம் 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்து தென்னாபிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி வீரர் சம்ஸி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதனால் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் வெற்றி குறித்து கேப்டன் மார்கம் கூறுகையில் “இது ஒரு நல்ல தொடக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளது. பெரும் ரசிகர் கூட்டம் இப்போட்டியைக் காண வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த எண்ணத்தை இந்திய பேட்டர்கள் பொய் ஆக்கினார். ஆனால் ஆட்டத்தின் பாதியில் குறுக்கிட்ட மழை எங்களுக்கு நன்றாக உதவியது.

பந்துவீச்சாளர்கள் தங்கள் சொந்த திட்டங்களுடன், கடினமான முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். ஹென்றிக்ஸ் பேட்டிங்கில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அபாரமாக விளையாடினார். டி20 உலகக் கோப்பைக் காண வீரர்களை தேர்வு செய்யும் நேரம் இது. அதன் தொடக்கம் இத்தொடரில் இருந்து ஆரம்பிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது” என்று கூறினார்.