இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது
இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் தற்பொழுது நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கின்றன.
இந்த நிலையில் அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இஷான் கிஷான், முகமது சமி மற்றும் ருதுராஜ் ஆகிய மூவரும் வெளியேறியிருக்கிறார்கள்.
இருவர் காயத்தால் வெளியேறி இருக்க ஈசான் கிஷான் குடும்ப விவகாரங்களுக்காக வீட்டுக்கு திரும்புகிறார் என்ற தகவல் ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் வேறொரு காரணம் பின்னணியில் இருந்திருக்கிறது.
இஷான் கிஷான் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் ஆரம்பித்து அதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சென்று, அங்கிருந்து ஆசிய கோப்பை அடுத்து உடனேயே உலகக்கோப்பை, மீண்டும் ஓய்வு இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடர், அதேபோல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என ஓய்வில்லாமல் விளையாடி வந்தார்.
இதன் காரணமாக அதிகப்படியான மனச்சோர்வில் தான் இருப்பதாகவும் எனவே சில காலம் தனக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு வேண்டும் எனவும் கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று இருக்கிறார். இதுகுறித்து வெளியில் வந்துள்ள செய்தித்தாள் செய்திகளில் “தனக்கு மனசோர்வு இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஓய்வு வேண்டும் எனவும் அவர் கேட்டார். அணி நிர்வாகம் இதற்கு உடனே ஒப்புக் கொண்டது” என்று கூறப்பட்டு இருக்கிறது!
இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு மிகப் பெரிய வரவேற்பும் வருமானமும் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி நிறைய போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் வீரர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து உழைக்க வேண்டியது இருக்கிறது. இதன் காரணமாக வீரர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல், இப்படியான மன அழுத்தங்களுக்கு உள்ளாவது தற்பொழுது தொடர்கிறது.
உலகக்கிரிக்கெட்டில் முதலில் மேக்ஸ்வெல் அடுத்து பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இப்படியான காரணங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்று வெளியேறியிருந்தார்கள். பிறகு விராட் கோலியின் ஒரு மாத காலம் மன பாதிப்பிற்காக வெளியேறினார். தற்பொழுது இஷான் கிஷான் வெளியே சென்றிருக்கிறார். நவீன கிரிக்கெட்டில் இந்தியா போன்ற பெரிய கிரிக்கெட் நாடுகள் இந்த விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்!