துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டலத்துக்கு எதிராக கிழக்கு மண்டல அணிக்காக முகமது ஷமி அபாரமாக பந்துவீசி அசத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கியிருந்தாலும், அவரது பந்துவீச்சில் எந்தவித சோர்வும் தெரியவில்லை. இந்தப் போட்டியில் ஷமியின் செயல்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்தப் போட்டியில் ஷமி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக, இன்னும் அதிக ஓவர்கள் வீச வேண்டும் என்று அவரே கேப்டனிடம் கேட்டுக் கொண்டது அவரது ஆர்வத்தையும், இந்திய அணிக்காக மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தையும் வெளிப்படுத்தியது. இதுதான் கேப்டன் இஷான் கிஷனுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இதுகுறித்து இஷான் கிஷன் கூறுகையில், “ஷமி ஒரு ஜாம்பவான் வீரர். இந்தியாவுக்காக அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் அவர் காட்டிய முயற்சியை பார்க்கும்போது, இன்னும் அதிக ஓவர்கள் வீச வேண்டும் என்று ஷமி பாய் கேட்டுக் கொண்டிருந்தார். அது ஒரு கேப்டனாக எனக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும், அவர் இரண்டு பவுண்டரிகளையும் அடித்துள்ளார். இப்போது அவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று நினைக்கிறேன்” என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார்.