இந்தியா போன்ற அணிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் விளையாடச் செல்லும்போது, அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு மைதானங்களின் ஆடுகளம், வானிலை, பந்தின் வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றை வீரர்கள் முன்கூட்டியே எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்றாலே நீண்ட காலம் அங்கேயே தங்கி விளையாடும் நிலை இருந்ததாக ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். அப்போது ஒரு அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் சுமார் நான்கு மாதங்கள் வரை நீடித்ததுடன், உள்ளூர் கவுண்டி அணிகளுக்கு எதிராக ஏழு போட்டிகள் வரை விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டிகள் சாதாரண பயிற்சி ஆட்டங்களாக இல்லாமல், உண்மையான சவாலை கொடுக்கும் வகையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது. பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் குறைந்ததால், பல நேரங்களில் கவுண்டி அணிகள் தங்களது இரண்டாம் தர வீரர்களையே களமிறக்குகின்றன.
இதனால் பயிற்சி ஆட்டங்களை கட்டாயமாக்குவது கோட்பாட்டளவில் தவறான முடிவு கிடையாது என்று கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, அதே நேரத்தில் அந்தப் போட்டிகளின் தரம் எப்படி பராமரிக்கப்படும் என்பதுதான் முக்கியமான கேள்வி என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “வெளிநாட்டு நாடுகளுக்கு செல்லும்போது பயிற்சி ஆட்டங்கள் கட்டாயமாக்கப்படுவது தவறில்லை. ஆனால் அந்தப் போட்டிகளின் தரத்தை எப்படி உறுதி செய்வது என்பதுதான் எனக்கு தற்போது தெரியவில்லை. நான் குறிப்பிடும் காலத்தில் உள்ளூர் அணிகள் மிகவும் வலுவாக இருந்தன; சில நேரங்களில் எங்களை கிட்டத்தட்ட தோற்கடிக்கும் அளவுக்கு விளையாடின. ஆனால் இப்போது போட்டிக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று கூறி, அவர்கள் இரண்டாம் தர வீரர்களை களமிறக்குகிறார்கள். எனவே பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படுவது மட்டுமல்லாமல், அதன் தரமும் கொஞ்சம் பராமரிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.