“இந்தியால பேஸ்பால் வச்சு பொளக்க போறோமா?” – பென் ஸ்டோக்ஸின் தரமான பதில்!

0
1736

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கோப்பை காண 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் தொடர் முடிவடைந்தது . கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதால் வெற்றிக்கோப்பையை அந்த அணியே தக்க வைத்துக் கொண்டது.

மிகுந்த பரபரப்பு இடையே தொடங்கிய 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா அணி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் இரத்தானது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

- Advertisement -

கடந்த ஆண்டு முதலே இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பேஸ்பால் என்ற அதிரடியான அணுகுமுறைக்கு டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை போல தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிக்கும் இந்த முறைக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அணுகு முறையில் மூலம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியான அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த பேஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அணுகுமுறையின் மூலம் இங்கிலாந்து அணி நியூசிலாந்து பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியுடன் ஆன முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிக குறைந்த வித்தியாசங்களில் தோல்வியை தழுவியது. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பேஸ்பால் முறையை குறை கூறினர். ஆயினும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் தொடர்ந்து பேஸ்பால் முறையில் விளையாடி மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பேஸ்பால் முறை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. தற்போது டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால் அதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளை வெற்றியை நோக்கி விளையாடுவதை வீரர்கள் தங்கள் பிரதானமாக கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணின் தோல்விக்கு பிறகு இலங்கை சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி தனது அணுகுமுறையை மாற்றி வேகமான ரன் எடுப்பில் ஈடுபட்டதும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கு இங்கிலாந்து அணியின் புதிய அணுகுமுறை ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வருகின்ற ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி குறித்து நேற்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு ஆச்சரியமான பதிலை அளித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் .

இது குறித்து பேசி இருக்கும் அவர் ” எங்களது அணுகு முறையில் மூலம் நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றோம். பாகிஸ்தானிலும் சென்று 3-0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றோம். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம் . அதனால் சிறப்பாக இந்தியாவிலும் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காலம் அதற்கான பதில் சொல்லும் ” என போட்டிக்கு பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.