பதினாறாவது ஐபிஎல் சீசன் மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இதில் ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது!
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடரில் வெற்றி உலகக் கிரிக்கெட்டின் அட்டவணைகளை மிகப்பெரிய அளவில் மாற்றிப் போட்டு இருக்கிறது.
ஐபிஎல் தொடர் நடக்கும் காலக்கட்டத்தில் பெரிய அணிகள் ஏதும் போட்டிகளில் தனியாகப் பங்கேற்பது கிடையாது. பெரிய அணிகளின் நட்சத்திர வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பெரிய அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனால் சர்வதேச கிரிக்கெட்டுக்கான மதிப்பு மிகவும் குறைந்து வருவதாகப் பல வீரர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். தற்பொழுது இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.
அவர் கூறும் பொழுது “வீரர்களின் நேரத்தின் மேல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இருந்த ஏகபோக உரிமை தற்போது கிடையாது. ஐபிஎல் இதைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியது. அது இன்னும் தீவிரமாக இருக்கிறது. நாம் இதில் இன்னும் கொஞ்சம் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
எங்களால் முடிந்தவரை ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் பொழுது சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வீரரும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் உயர் செயல் திறனை கடைபிடிக்க வேண்டும். இப்பொழுது எங்களால் இதைத்தான் செய்ய முடியும்.
டி20 அணி உரிமையாளர்களால் வீரர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளைக் குறித்து நாம் பேசும் பொழுது, அந்த விருப்பத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய வீரர்களைப் பற்றி நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவது ஏன் சிறப்பானது என்று நாம் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் சர்வதேச கால்பந்து விளையாட்டு போல மாறி வருகிறது. நீங்கள் உங்கள் கிளப்பில் விளையாடுகிறீர்கள். உங்கள் நாட்டிற்காக விளையாடுகின்ற நேரத்தின் பொழுது நீங்கள் விடுவிக்கப்படுகின்றீர்கள். நாளை நாட்டுக்காக விளையாட அணி உரிமையாளர்களிடம் கேட்க வேண்டியதாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!