எனக்கு வரமும் சாபமும் இதுதான்.. கடைசி ஓவர்ல போல்ட் கிட்ட ஒரு விஷயத்தை சொன்னேன் – ஆட்டநாயகன் ஹெட்மயர் பேட்டி

0
2178
Hetmyer

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிம்ரன் ஹெட்மயர் ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் அதிரடியாக 27 ரன்கள் எடுத்து அந்த அணியை வெல்ல வைத்தார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 147 ரன்கள் எடுத்தது. மெதுவான இந்த ஆடுகளத்தில் இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் திணறியது. கடைசி மூன்று ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிம்ரன் ஹெட்மயர் காட்டிய அதிரடியால், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறாவது போட்டியில் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் வலுவாகத் தொடர்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சிம்ரன் ஹெட்மயர் பேசும்பொழுது “கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்வது உண்மையில் பயிற்சியால் வருவதுதான். வலைப்பயிற்சியில் நான் சரியாக இருக்க விரும்புகிறேன். சிக்ஸர் அடிக்கும் பயிற்சியில் எல்லோரும் சென்ற பிறகும் நான் பயிற்சி செய்வேன்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை வாய்ந்திருப்பது ஒரு வகையில் எனக்கு வரமாகவும் இருக்கிறது சாபமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் அது நடக்கும். சில நேரங்களில் அது நடக்காது. இன்று அணியின் வெற்றிக்கு உதவ முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தோல்விபற்றிய எண்ணங்கள் வரத்தான் செய்யும். நான் அதை ஒதுக்கி தெளிவாக இருக்க முயற்சி செய்கிறேன்.

கடைசி ஓவரின் முதல் சில பந்துகளுக்கு பிறகு போல்ட் வந்து என்னை அமைதிப்படுத்தினார். இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட பொழுது, நான் அந்த சூழ்நிலையில் சிங்கிள் எடுக்கவும் நினைத்தேன். அப்பொழுது நான் போல்ட் இடம் சிங்கிள் கிடைத்தாலும் எடுக்கலாம் என்று கூறினேன். ஏனென்றால் ஆட்டத்தை எப்படியாவது டை செய்து விடவாவது நினைத்தேன்.

- Advertisement -

அந்த நேரத்தில் நான் சிங்கிள் அல்லது இரண்டு ரன்கள் எடுக்க நினைத்தபொழுது ஃபுல் டாஸ் பந்து கிடைத்தது. நான் அதை சிக்ஸருக்கு அடிக்க வெற்றிகரமாக ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டு மாத காலம் வீட்டை விட்டு வந்து இங்கு விளையாடுகிறோம். எனவே நாம் நம்மை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறோமோ அதுதான் மிகவும் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.