19.1 ஓவர்.. பட்லர் பதிலடி சதம்.. விராட் கோலி ஆட்டம் வீண்.. ஆர்சிபியை வீழ்த்தி ராஜஸ்தான் பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தை பிடித்தது

0
410
Buttler

இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 19.1 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், ஆர் சி பி அணியில் அனுஜ் ராவத்துக்கு பதிலாக சவுரவ் சவுகான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

- Advertisement -

ஆர்சிபி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கேப்டன் பாப் டு பிளிசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14 ஓவர்களில் 125 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கேப்டன் பாப் டு பிளிசிஸ் 33 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 42 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 (3), அறிமுகவீரர் சவுரவ் சவுகான் 9 (6), கேமரூன் கிரீன் 5* (6) ரன்கள் எடுத்தார்கள். ஆனால் ஒரு பக்கமாக நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடி 67 பந்துகளில் எட்டாவது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 72 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 113 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. சாகல் நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ஜெய்ஸ்வால் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரும் பட்டையைக் கிளப்பினார்கள். ஆர்சிபி அணியின் கைகளில் இருந்து ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக பறித்து விட்டார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவரும் ஆறு சதம் கடந்தார்கள். இறுதியாக 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த ரியான் பராக் 4 (4), துருவ் ஜுரல் 2 (3), ஹெட்மையர் 11* (6) ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : 2024 ஐபிஎல்.. சிறந்த கேப்டன் கம்மின்ஸ் கிடையாது.. இந்த இந்திய வீரர்தான் – ஸ்டீவ் ஸ்மித் தேர்வு

இன்னொரு பக்கத்தில் நிலையாக நின்று சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து 19.1 ஓவரில் அணியை வெல்ல வைத்ததோடு, அவருடைய ஆறாவது ஐபிஎல் சதத்தையும் நிறைவு செய்தார். இறுதி வரை களத்தில் நின்ற ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 100 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் நான்கையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஆர்சிபி அணி ஐந்தாவது போட்டியில் நான்காவது தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.